ஓபிஎஸ் அதிரடியை சமாளிக்க சசிகலா எழுதிய கடிதம்
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றது செல்லாது என்றும் பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் நேற்று ஓபிஎஸ் அணியில் உள்ள அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார். மேலும் அடிமட்ட தொண்டர்களால் விரைவில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிந்த்தார்.
ஓபிஎஸ் அணியின் அதிரடியை சமாளிக்க சசிகலா தற்போது தொண்டர்களின் ஆதரவை பெறும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘‘தமிழகத்தில் அதிமுக 7-வது முறையாக அரசு அமைத்துள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக அரசாட்சியை நீட்டித்து வரலாற்று பெருமிதத்தில் வாகை சூடி நிற்கிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டை இயலாருக்கு உதவுகின்ற இணையில்லா திருநாளாக கொண்டாடி மகிழ்வோம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற அண்ணாவின் உயரிய வழியில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சிய கனவுகளை உயிராக காக்க உறுதி கொள்வோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் கடந்த மாதம் 27ஆம் தேதியே எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போதுதான் ஊராட்சி அளவிலான அதிமுக கிளைச் செயலாளர்களுக்கு கிடைத்துள்ளது. அதிமுக அடிமட்ட தொண்டர்களை கவர சசிகலா எடுத்த முயற்சிகள் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்