முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா புஷ்பா எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் சிறப்பு தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை என தனது வழக்கமான பணிகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ள நிலையில் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி, முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘இறைவன் அருளால் தாங்கள் உடல்நலம் பெற்றுத் தேறி வருவது கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு வர விரும்புகிறேன். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பது பற்றி அரசின் ஆலோசகர் மற்றும் செயலர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். தஞ்சாவூரில், ‘சின்னம்மா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் வேலைகளும் நடந்தன. தஞ்சை தொகுதியில் அவரை போட்டியிட வைக்கவும் சிலர் முயற்சி செய்தனர். அவை அனைத்தையும் நான் முறியடித்தேன். இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வராமல் மறைக்கப்படலாம்.
நீங்கள் என்னைக் கண்டித்தது என்பது, ஒரு தாய் தன் மகளைக் கண்டித்தது போலத்தான். ஆனால், மாற்றார் முன்னிலையில் மகளைத் தாய் கண்டித்ததால், மகளின் சுயமரியாதை பாதிக்கப்பட்டது. அதன் விளைவாகவே சில செயல்களில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேநேரத்தில், தாய்க்கு ஒரு பிரச்னை நேரும்போது, மகள் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டாள் என்பதை உணர்த்துவதற்காகத்தான், நீங்கள் சிகிச்சையில் இருந்த நேரத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டதை கடுமையாக எதிர்த்தேன். ‘நான் எப்படி வளர வேண்டும்’ என்பதைச் சொல்லி, என்னை துணிச்சலாக வளர்த்தீர்களோ, அதை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. தங்களிடம் நான் முன்வைப்பது ஒன்றைத்தான். சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம்கோபால் யாதவின் செயல்களை மன்னித்து, அவரை மீண்டும் முலாயம் சிங் யாதவ், கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார். அதைப்போல, எனக்கும் கட்சியின் கொறடா மற்றும் மகளிர் அணி பதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதியுள்ளார்
மேலும் கடந்த 60 நாட்களில் தமிழகத்திலும், கட்சியிலும் என்ன நடந்தது, யார் யார் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்துள்ளனர் என்பது குறித்து விரிவாக செல்கிறதாம் அந்த கடிதம். இந்த கடிதத்தை ஜெயலலிதா படித்தாரா? ஒருவேளை படித்தாலும் நடவடிக்கை எடுப்பாரா? என்பது குறித்து அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.