ஜெயலலிதா இல்லை என்ற கவலை தற்போது இல்லை. அமைச்சர் உதயகுமார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றது போல ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதால் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவும் ஏற்றனர்.
இந்நிலையில் முதல்வர் பதவியையும் சசிகலா விரைவில் கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் அதிமுக அமைச்சர்கள் முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.,
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்த சசிகலா கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அப்போது அவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது. உலக அரசியல் வரலாற்றிலும் அது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 3 தலைமுறைகளை பாதுகாக்கும் உரையாகவும் அது அமைந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிள்ளைகளை கட்டிக் காக்கும் உன்னதமான பொறுப்பை சசிகலா ஏற்றுக் கொண்டுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்குமே ஆறுதலான பாதுகாப்பான உரையாகவே அது உள்ளது.
ஜெயலலிதாவை பெற்றெடுத்த சந்தியா தாயை விட அவருடன் சசிகலாவே அதிக ஆண்டுகள் உடன் இருந்துள்ளார். இன்று அவரது அரசியல் வாரிசாக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ளதன் மூலம் ஒட்டு மொத்த அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சாதி சமய வேறுபாடின்றி கட்சியை வழிநடத்திச் செல்வோம் என்கிற உறுதி மொழியை அவர் ஏற்று இருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் துணை நிற்பார்கள்.
தமிழகத்துக்காகவே வாழ்ந்தார் ஜெயலலிதா. அவருக்காகவே வாழ்ந்தார் சசிகலா. ஜெயலலிதாவின் வழியில் எஞ்சிய காலத்திலும் கட்சிக்காகவே உழைப்பேன் என்று அவர்கூறி இருக்கிறார். இது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி தமிழ் சமுதாயத்தினருக்கே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று ஜெயலலிதா இல்லை என்கிற கவலை சசிகலாவால் மறந்து போய் உள்ளது. தாயை இழந்த பிள்ளைகளுக்கு கருணைத்தாயாகவே அவர் கிடைத்துள்ளார். ஜெயலலிதா இல்லை என்கிற ஏக்கமும் தீர்ந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.