மதுரை, விருதுநகர் மாவட்டம் எல்லையில் உள்ள, சதுரகிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, 6.93 கோடி ரூபாய் மதிப்பில், நடைபாதை சீரமைக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட, சாம்பல் நிற அணில், வன உயிரின உய்விட வனப் பகுதியில், தாணிப்பாறையில் இருந்து, சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் செல்கின்றனர்.அவர்கள் முறையற்ற வகையில் செல்வதால், வனத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த மே மாதம், கோவிலுக்கு சென்ற பக்தர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதில், ஏழு பேர் பரிதாபமாக இறந்தனர். வெள்ளம் காரணமாக, நடைபாதை சேதமடைந்தது. எனவே, வனத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்கள் பாதுகாப்பாக செல்லவும், ஏற்கனவே உள்ள அனுமதிக்கப்பட்ட நடைபாதையை மேம்படுத்த, 6.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. மேம்படுத்தும் பணிக்கான, டெண்டரும் கோரப்பட்டுள்ளது.