சத்தியமூர்த்தி ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.
1939-ம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944-ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.
சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19,1887 அன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் பிறந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.
1930-ம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.1942-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28,1943-ம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.