சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ மீதான வருமான வரி மோசடி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதாக இருந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துளது.
ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்குமதிப்பு படுவீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த மோசடிக்கு காரணமான ராமலிங்க ராஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 2009 ஜனவரி 7ம் தேதி, சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், மோசடி வழக்கில் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது. அதே நேரத்தில் சத்யம் மோசடியின் வெறொரு வழக்கில் கடந்த டிசம்பர் 23-ந் தேதி தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கில் 3,000 ஆவணங்கள், 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 9-ந் தேதி இறுதித் தீர்ப்பு வழங்குவதாக ஐதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.