ஃபேஸ்புக்கில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை. சவுதி அரேபியா அறிவிப்பு
பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பொதுமக்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அரசின் கொள்கைகள், சினிமாக்கள், மற்றும் பல சமூக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக ஏதாவது கருத்துக்களை பதிவு செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இணையத்தைக் கண்காணிக்க மட்டுமே புதிய துறை ஒன்றையும் அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி அரேபிய அரசு, மோசமான வதந்திகளுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் என்றும், அதை விட சவுக்கடி, வீட்டுக் காவலில் வைத்தல், சிறை வாசம் மற்றும் அவர்களின் இணையத் தளங்களை முடக்குதல் போன்ற தண்டனைகளும் குற்றங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்காக மரண தண்டனை கொடுக்ககூடிய ஒரே ஒரு வளைகுடா நாடு சவூதி மட்டுமே என குற்றம் சாட்டியுள்ளனர்.