மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 107 பேர் பரிதாப பலி.
முஸ்லிம்களின் புனித நகரம் என்று போற்றப்படும் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு எதிர்பாராத விதத்தில் சரிந்து விழுந்ததில் 107 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர விபத்தை நேரில் பார்த்த கூறுகையில், “மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேற்றிரவு மசூதியை சுற்றிலும் ஏராளமான ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.
அந்த நேரம், பலத்த இடியுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர். அப்போது மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.
விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அசுரவேகத்தில் நடைபெற்று வருகின்றது. கடுமையாக வீசிய காற்றின் காரணமாக இந்த கிரேன் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.