கல்லீரலை காப்போம்

12

மனித உடலின் முக்கிய உறுப்பு கல்லீரல். அதன் செயல்பாடுகள் குறித்தும், அதை எவ்வாறு காக்க வேண்டும் என்பது பற்றியும் டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விளக்குகிறார். கல்லீரல் தான் நமது உடலின் பெரிய உள் உறுப்பு. சுமார் 3 முதல் 3.5 பவுண்ட் எடை கொண்டது. இந்த கல்லீரலின் வேலை தான் என்ன?

* தன்னுள் பித்தப்பையை வைத்துள்ளது.

* கல்லீரலும் மற்ற ஜீரண உறுப்புகளும் இணைந்து செரிமானம், சத்துக்களை உள்ளிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றது.

* கல்லீரல் உணவுப் பாதையிலிருந்து வரும் ரத்தம் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு முன்பு வடிகட்டி நச்சுப் பொருட்களை நீக்கி ரத்தத்தை தூய்மை செய்கின்றது.

மருந்து உட்கொள்ளும் பொழுது அதிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது. பித்த நீரை சுரக்கின்றது. இதுவே கொழுப்பினை செரித்து வைட்டமின் ஏ,டி,ஈ.கே இவைகளை எடுத்துக் கொள்ள உதவுகின்றது. உடலில் வைட்டமின், தாது உப்புக்கள், சர்க்கரை இல்லாமை ஏற்படாதிருக்க அவற்றை சேகரித்து வைத்துக் கொள்கின்றது.

கல்லீரலின் இத்தகைய பங்கு இல்லாமல் உடலில் எந்த செயல்பாடும் நிகழ முடியாது. இந்த கல்லீரல் அதிகமாக பாதிக்கப்படுவதன் முதல் காரணம் குடிப் பழக்கமே. கல்லீரல் பாதிப்பின் பொதுவான அறிகுறியே ‘மஞ்ச காமாலை’தான். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் சோர்வு, எடை குறைவு, வாந்தி, வயிற்றுல் பிரட்டல் மற்றும் மஞ்சள் காமாலை ஏற்படும்.

பொதுவில் கல்லீரல் பாதிப்பு என்பது, அது 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்படும் போதே வெளியே தெரியும். நமது உடலில், கல்லீரல் மட்டுமே பாதிப்பு ஏற்படும் திசுக்களை மாற்ற வல்லது. ஆயினும் அதற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டால் அது இயலாததாகி விடும். கல்லீரலின் வேலை ஒரு தொழிற்சாலையின் வேலையினைப் போன்றது.

* பித்த நீர் சுரப்பினால் உணவு செரிமானம் நிகழ்கின்றது.

* அதிக சர்க்கரையினை சேமித்து தேவைப்படும் பொழுது கொடுக்கின்றது.

* ரத்தம் உறைவதற்கான சில பொருட்களை உற்பத்தி செய்கின்றது.

* புரதம் உருவாக்குகின்றது. நோய் எதிர்ப்பு புரதத்தினை உருவாக்குகின்றது.

* இரும்பு சத்தை உருவாக்குகின்றது. இது சிகப்பணு உற்பத்திக்கு இன்றியமையாதது.

* தேவையற்றவைகளை யூரியாவாக மாற்றி சிறுநீரில் வெளியேற்றுகின்றது.

* மருந்துகளை உடல் எடுத்துக் கொள்ள உதவுகின்றது. ‘சிரோஸிஸ்’ எனப்படும் கல்லீரல் நோய் பாதிப்பில் நல்ல திசுக்கள் தடித்த திசுக்களாக மாரி கல்லீரலால் வேலை செய்ய முடியாமல் ஆகிவிடுகின்றது.

* கல்லீரலின் திசுக்கள் வீங்கலாம்.

* ஹெப்படைட்டிஸ் ‘ஏ’ எனப்படும் வைரஸ் கிருமியால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் சுகாதாரமின்மை காரணமாகவே ஏற்படுகின்றது.

கழிவுப் பொருள் சுகாதாரமின்மை காரணமாக உணவுடன் கலக்கும் பொழுதே இத்தாக்குதல் ஏற்படுகின்றது. கைகளை சுத்தமாய் கழுவுவது குறிப்பாக உணவு தயாரிக்கும் பொழுது கைகளை சுத்தமாய் கழுவுவது இந்த பாதிப்பினைத் தடுக்கும். இதற்கான ‘ஏ’ வாக்சின் (தடுப்பு ஊசி) எடுத்துக் கொள்வதன் மூலம் இதனைத் தவிர்த்து விடலாம்.

ஹெப்டைட்டிஸ் ‘பி’ எனப்படும் வைரஸ் தாக்குதல் சுகாதரமில்லாத ஊசிகள், ரத்தம், தவறான உடல் உறவு இவற்றின் மூலம் ஏற்படுகின்றது. இந்த கிருமி கல்லீரல் புற்றுநோய், கல் லீரலை செயலிழக்கச் செய்வது போன்ற தாக்குதல்களை கொண்டு வந்து விடும். இதற்கான ‘பி’ வாக்சின் எடுத்துக் கொள்வதே இதனைத் தவிர்க்கும் முறையாகும்.

ஹெப்படைட்டிஸ் ‘சி’ எனப்படும் வைரஸ் தாக்குதலும் பாதிக்கப்பட்ட ரத்தம், ஊசி போன்றவற்றால் ஏற்படுவது. சிரோஸில் மற்றும் கல்லீரல் புற்று நோய் வரை இந்த வைரஸ் கிருமியால் ஏற்படும். டி.ஈ. வைரஸ் கிருமிகளும் இது போல் உள்ளன.

மேலும் சில வைரஸ் கிருமிகள், மது இல்லாமலும் கொழுப்பு மிகுந்த கல்லீரல், அதிக இரும்பு சத்தால் ஏற்படும் பாதிப்பு என சில கல்லீரல் தாக்குதல்களும் உள்ளன. இருதய நோயாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். பல பாதிப்புகள் சிகிச்சை, கவனிப்பின் மூலம் தீர்வு பெறக் கூடியவை. சில பரம்பரை காரணமாக ஏற்படக் கூடியவை.

சின்ன காயத்தால் அதிக ரத்தப் போக்கு, உடல் அரிப்பு, ஆணுக்கு ஏற்படும் பருத்த மார்பகம், ஆண்மை குறைவு, குழப்பம், தசை தேய்மானம் போன்றவையும் கல்லீரல் பாதிப்பினால் ஏற்படக் கூடியவையே, கல்லீரலின் அதிக பாதிப்பிற்குப் பிறகே அறிகுறிகள் தெரியும்.

எனவே அதிக சோர்வு, காரணமின்றி எடை குறைவு ஆகியவை இருந்தாலே கல்லீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுபோல் அடிக்கடி ஜுரம், வாந்தி, வயிற்று வலி இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கல்லீரல் பரிசோதனைகள்:

* பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்
* மருத்துவரால் உடல் பரிசோதனை
* கல்லீரலுக்கான இரத்தப் பரிசோதனை
* தேவைப்பட்டால் ஸ்கேன்
* கல்லீரல் பயாபசி போன்றவைகள் ஆகும்.

கல்லீரல் பாதிப்பிற்கு மிக நல்ல சிகிச்சைகள் நவீன மருத்துவத்தில் உள்ளன. எனினும் வருமுன் தடுப்பதே தகுந்த தீர்வு ஆகும். மது, புகை பழக்கமின்றி இருப்பதும், தடுப்பு ஊசிகளை எடுத்துக் கொள்வதும், முறையான உணவுப் பழக்கத்துடன் இருப்பதுதான் கல்லீரலை காக்கும் வழிகள்.

மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது

* வயிற்று வலி
* பசியின்மை
* சோர்வு
* வயிற்றுப் பிரட்டல்
* வயிற்றுப் போக்கு போன்றவை முதல் அறிகுறிகளாகக் காட்டும்.

பாதிப்பு கூடும் பொழுது

* உடல், கண்ணில் மஞ்சள் நிறம்.
* கால், கணுக்கால், பாதம் வீக்கம்
* வயிற்றில் வீக்கம்
* அதிக ஜுரம், உடல் நடுக்கம்
* முடி அதிகமாய் கொட்டி விடுதல்
* வளைந்த கால், கை, நகங்கள்
* அதிக எடை குறைவு
* வாந்தியில் ரத்தம்
* வெளிப்போக்கில் ரத்தம் போன்றவை இருக்கும்.

அவசர மருத்துவ சிகிச்சை இதற்குத் தேவை. குடிப்பழக்கத்தாலும், அதிக எடையினால் கொழுத்த கல்லீரல் உருவாகின்றது. இதற்கான தீர்வு அவரவர் கையில்தான் இருக்கின்றது. 

Leave a Reply