புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி உமா அவர்கள் நேற்று ஓரே நாளில் 390 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி செய்துள்ளார். இதனால் அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் தலைமைக்காவலர்கள், காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் என 390 பேர்களுக்கு நேற்று இடமாறுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் எஸ்.பி.உமா.
எஸ்.பி உமாவுக்கு, காவல்துறையை சேர்ந்த பல அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பெறுவதாகவும், ஒரு சில அதிகாரிகள் அவர்களே பினாமி பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்ததாகவும் வந்த புகாரை அடுத்து இந்த அதிரடி மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் காரணமாகத்தான் இந்த இடமாற்றம் எனவும் சில அதிகாரிகள் கூறிவருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்த ஒரு மாவட்டத்திலும் இவ்வளவு அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் இதற்கு முன் செய்யவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த பெரும் மாற்றத்தால் எஸ்.பி,உமா உயரதிகாரிகளின் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்றும் பரவலாக கூறப்படுகிறது.