எஸ்பிஐ வங்கியுடன் 4 துணை வங்கிகள் இணைக்க ஒப்புதல்
இந்தியாவில் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் மற்றும் மகளிர்க்கென தொடங்கப்பட்ட மகிளா வங்கி ஆகியவற்றை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதால் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் உடனே தொடங்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய துணை வங்கிகளை இப்போதைக்கு இணைக்கும் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் துறையில் இந்த இணைப்பு மிகப் பெரியது என்றும் கருதப்படுகிறது. இந்த இணைப்புக்குப் பின்னர் எஸ்பிஐ நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 37 லட்சம் கோடியாக உயரும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் வங்கியின் 10 பங்குகளுக்கு (ரூ.10 முகமதிப்பு) எஸ்பிஐ 28 பங்குகளை (ரூ.1 முகமதிப்பு) அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் 10 பங்குகளுக்கு எஸ்பிஐயின் 22 பங்குகள் கிடைக்கும். இணைப்புக்குப் பின்னர் இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு சொத்தை எஸ்பிஐ நிர்வகிக்கும் திறன் உடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி இணைப்பு தொடர்பாக 8 நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, எந்த வங்கி பங்குக்கு எவ்வளவு அளிப்பது என்பது ஆராயப்பட்டதாக வங்கியின் தலைமை நிதி அதிகாரி அன்ஷுலா காந்த் தெரிவித்துள்ளார். வங்கிகளின் நிதி நிலையை ஆராய கடந்த மே 16-ம் தேதி வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு அன்றைய தேதி வரை வங்கிகளின் நிதி நிலையை இக்குழு ஆராய்ந்தது.