வைப்புத்தொகைகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு. மீண்டும் வாடிக்கையாளர் தலையில் கைவைத்த எஸ்பிஐ
தனியார் வங்கிகளை போலவே பாரத ஸ்டேட் வங்கியும் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 வரை வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியாக வாடிக்கையாளர்கள் வைக்கும் நிலையான வைப்புத்தொகைக்கு வழங்கப்படும் வட்டித் தொகையையும் அதிரடியாகக் குறைத்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில், 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு 6.75 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 6.25 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. முதியோருக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதத்திலிருந்து 6.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டித் தொகை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகவும், 7 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு வட்டியில் மாற்றமில்லை என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து இந்த புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வரவுள்ளன.