விஜய் மல்லையாவின் கோவா சொகுசு பங்களாவை கைப்பற்றியது ஸ்டேட் வங்கி
ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவா பங்களா ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி தற்போது பறிமுதல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் விஜய் மல்லையா வாங்கியுள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்தது. இதனையடுத்து தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகையை வசூலிக்கும் விதமாக, விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக கோவா மாநிலம், பனாஜியில் உள்ள அவரது சொகுசு பங்களா ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது.
இதுகுறித்து அந்த வங்கியின் வழக்குரைஞர் விகாஸ் குமார் கூறுகையில், “அந்த பங்களாவானது பாரத ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இனி அந்த பங்களாவுக்குள் யாரும் செல்ல முடியாது’ என்று கூறினார்.