பணத்தை திருப்பி செலுத்த தவறிய மோசடியாளர் விஜய்மல்லையா. SBI வங்கி அறிவிப்பு
கிங் பிஷன் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையாவை ஏற்கனவே யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் ”வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து தற்போது பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்.பி.ஐ.) அவரை அதேபோன்று ”வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்” என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது ”விஜய் மல்லையா, அவரது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
யு.பி. குழுமத்தின் கீழ் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங் ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் விஜய் மல்லையா கடந்த 2010-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளிடம் ரூ.6,900 கோடியை கடனாக பெற்றது.
எஸ்.பி.ஐ. – 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி – 800 கோடி, ஐ.டி.பி.ஐ. வங்கி – 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா – 650 கோடி, பாங்க் ஆஃப் பரோடா – 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 410 கோடி, யுகோ வங்கி – 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி – 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் – 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 140 கோடி, ஃபெடரல் வங்கி – 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி – 60 கோடி, ஆக்சிஸ் வங்கி – 50 கோடி என அனைத்து வங்கிகளும் மிகப்பெரிய அளவில் விஜய் மல்லையா நிறுவனங்களுக்கு கடன் வழங்கின
ஆனால் தன்னுடைய நிறுவனங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங் ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. இதனிடையே, யு.பி. குழுமத்தின் பங்குகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டதன் மூலம் ரூ.1,100 கோடி கடன் தொகையை வங்கிகள் கடந்த 2013-ம் ஆண்டில் மீட்டெடுத்தன. மேலும், மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, ரூ.100 கோடி மதிப்புமிக்க கிங் ஃபிஷர் இல்லத்தை எஸ்.பி.ஐ. வங்கி கையகப்படுத்தி வைத்துள்ளது. இதைப்போலவே, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள், இரும்புத் தூண்கள், எடைதூக்கிகள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளை அடுத்த மாதம் இணையதளம் மூலமாக ஏலம்விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன.