விஜயகாந்த்-பிரேமலதா பிடிவாரண்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி மீது தொடரந்த அவதூறு வழக்கு ஒன்றில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து 4 முறை இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த பிடிவாரண்டி பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘தன்மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ”அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும்? பழிவாங்கும் ஆயுதமாக அவதூறு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குப் பட்டியலை 2 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். விஜயகாந்த், பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று உத்தரவிட்டு இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.