கிறிஸ்தவ முறைப்படி வழங்கும் விவாகரத்து செல்லாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
இஸ்லாமியர்கள் அவர்களது மதச்சட்டத்தின்கீழ், மூன்று முறை ‘தலாக்’ சொன்னால், அதை விவாகரத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேபோல் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மத வழக்கப்படி வழங்கப்படும் விவாகரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக கத்தோலிக்க சங்கத்தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான கிளாரன்ஸ் பயஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
‘கிறிஸ்தவர்களுக்கு திருமணங்களை அங்கீகரிக்கவும், அதை முறித்து விவகாரத்து அளிக்கவும் கிறிஸ்தவர்களுக்கான ‘கேனன் லா’ அதிகாரம் அளித்துள்ளது. அதன்படி, கிறிஸ்தவ தேவாலய நீதிமன்றங்களில் விவாகரத்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்க மறுப்பதால், இந்த முறையில் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்தவர்கள், இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 494-ன் கீழ் தண்டிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. முஸ்லிம்களுக்கு அவர்களது மதச் சட்டத்தின்கீழ், மூன்று முறை ‘தலாக்’ சொன்னால், அதை விவாகரத்தாக ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மத வழக்கப்படி வழங்கப்படும் விவாகரத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?’என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்தது. பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கிறிஸ்தவ நீதிமன்றங்களில் வழங்கப்படும் விவாகரத்து சட்டப்படி செல்லாது. இந்த வகையில் விவாகரத்து பெற்ற பின்னர் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்கள் குற்றம் செய்தவர் களாக கருதப்படுவார்கள். இத்தகைய விவாகரத்துகளை சட்டப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதற்கு அங்கீகாரம் உண்டு’என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.