பார்வையற்ற ஏழை மாணவியர் கல்லூரி படிப்பை தொடர உதவித்தொகை பெறலாம் என, யூடிஸ்போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, நலத்திட்ட உதவிகளை பெற பலரும் முன்வருவதில்லை. இதனால், பார்வையற்ற ஏழை மாணவியர் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, கோவை யூடிஸ்போரம் தன்னார்வ அமைப்பு கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற மாணவியரின் உயர்கல்வி படிப்பை ஊக்கப்படுத்த, மார்கா – ஷூல்ஸே கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இளங்கலை மாணவியருக்கு ரூ. 12 ஆயிரமும், முதுகலை மாணவியருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரையும், கல்வியியல் மாணவியருக்கு ரூ. 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் பயின்றவர்களுக்கு இலவசமாக லேப்- டாப் வழங்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவியரும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 300 பார்வையற்றவர்களுக்கு ரூ.45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த கல்லூரி முதல்வர்களின் ஒப்புதல் சான்று பெற்று உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை இறுதிக்குள் 18/17, தடாகம்ரோடு, லூனா நகர், கோவை- 25 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் தகவலுக்கு 0422- 2402 327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, யூடிஸ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.