இங்கிலாந்து நாட்டின் பள்ளி ஒன்றில் மாணவிகள் குட்டை பாவாடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை எதிர்த்து மாணவிகள் மட்டுமின்றி மாணவிகளின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹெர்ட்போர்ட்ஷைர் கவுண்டி என்ற பகுதியில் உள்ள செயிண்ட் மார்கரெட் பள்ளியில், ஏ-கிரேடு படிக்கும் மாணவிகள் குட்டைப்பாவாடை அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்துள்ளது. அப்பள்ளியின் தலைமையாசிரியை ரோஸ் ஹார்டா அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தொழில்முறை(Professional) மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஏ கிரேடு மாணவிகள் கணுக்கால் வரை மூடிய உடைகளை மட்டும் அணிய வேண்டும் என்றும், தொடை தெரியும் வகையில் குட்டை பாவாடை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியையின் இந்த முடிவுக்கு மாணவிகள் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் மகள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களே தவிர தலைமை ஆசிரியை அல்ல என்று பல பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.