பள்ளி மாணவர்கள் உடல் பருமனைக் குறைக்க புதிய முயற்சி

images

தொடர் கண்காணிப்பின் மூலம் பள்ளி மாணவர்களிடம் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவமனையின் சார்பில் கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடைபெற்றது.
 இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச மருத்துவ இதழ் ஒன்றில் அண்மையில் வெளியிடப்பட்டது.
 இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
 சென்னையில் உள்ள 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பைச் சேர்ந்த 1,357 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வின்படி இந்த மாணவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.
 இரண்டு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உணவுக் கட்டுப்பாடு, துரித உணவுகளைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி ஆகியவை குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.
 அதன்பின்பு ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட மாணவர்களின் உணவுப் பழக்கங்களைக் கண்காணிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
 முதல் பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட இடைவேளைகளில் மீண்டும் மீண்டும் உணவுப் பழக்கவழக்கம் குறித்த பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. மற்ற பிரிவினருக்கு தொடர் பயிற்சி வழங்கப்படவில்லை.
 ஆய்வின் முடிவில் உணவுப் பழக்கம் குறித்து தொடர் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களில் 19.1 சதவீதம் பேர் துரித உணவு பயன்பாட்டை குறைத்திருந்தனர். மாறாக பயிற்சி அளிக்கப்படாத மாணவர்களில் 16.9 சதவீதம் பேர் மட்டுமே பயன்பாட்டைக் குறைத்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
 இந்த ஆய்வு முறையை வேறு சில பள்ளிகளிலும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply