அடிப்படை அறிவியல் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மாதம்தோறும் 5,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை உதவித் தொகைகளை வழங்குகிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற +1, +2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விளக்குகிறார் கல்வியாளரும், ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.
Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) எனப்படும் இந்தக் கல்வி உதவித்தொகை மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டது. இளங்கலை முதலாமாண்டு முதல் 5 ஆண்டுகள் அல்லது ஆய்வுப் படிப்பு வரை மாதந்தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
என்னென்ன படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்?
B.Sc., B.S., B.Stat., B.Math., Int.M.Sc., M.S. in Chemistry, Physics, Mathematics, Statistics, Biochemistry, Microbiology, Cell Biology, Ecology, Molecular Biology, Botany, Zoology, Physiology, Biotechnology, Neurosciences, Bioinformatics, Marine Biology, Geology, Human Biology, Genetics, Biomedical Sciences, Applied Physics, Geophysics, Materials Science or Environmental Science ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
இந்த உதவித்தொகை மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.
எஸ்.ஏ(SA) பிரிவின் கீழ், தற்போது (2015-16)அறிவியல் பிரிவுகளை எடுத்து +1 படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 80% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 70% எடுத்தால் போதுமானது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் +2 படிப்பில் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 50% எடுத்தால் போதும். +2 தேர்ச்சி பெற்று மேற்கண்ட அறிவியல் பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து பட்டப் படிப்பில் சேர்ந்தபிறகே உதவித்தொகை கிடைக்கத் துவங்கும். இடைப்பட்ட காலத்தில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மண்டல மற்றும் தேசிய அளவிலான அறிவியல் முகாமில் பங்கேற்க வேண்டும்.
எஸ்.எக்ஸ் (SX) பிரிவின் கீழ் தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (2015-16) விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய மதிப்பெண் தகுதிகளே இந்தப் பிரிவுக்கும் பொருந்தும். +2 முடித்து மேற்கண்ட பிரிவுகளில் பட்டப் படிப்புகளில் சேர்ந்த பிறகு உதவித்தொகை கிடைக்கத் தொடங்கும். எஸ்.பி (SB) பிரிவின் கீழ் இந்தாண்டு (2015-16) மேற்கண்ட பிரிவுகளில் இளநிலை முதலாம் ஆண்டு சேர்ந்து படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கும் மேற்கண்ட தகுதிகள் பொருந்தும். தேர்வு செய்யப்பட்ட ஆண்டில் இருந்தே உதவித்தொகை கிடைக்கத் தொடங்கும்.
எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?
விண்ணப்பித்த மாணவர்கள் ஒரு நுண்ணறிவு எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறவேண்டும். இந்தத் தேர்வு 1.11.2015 அன்று நடைபெறும்.
எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
இளங்கலை பட்டப்படிப்பு காலங்களில் மாதம் 5000 ரூபாயும், அது தவிர ஆண்டுதோறும் உபரி செலவுகளுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும். முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு மாதந்தோறும் 7000 ரூபாயும் ஆண்டுதோறும் உபரி செலவுகளுக்கு 28,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகைகளை தொடர்ந்து பெற, மதிப்பெண் உள்ளிட்ட நிபந்தனைகளை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கோடை காலங்களில் அறிவியல் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் அறிவியல் பாடங்களை ஈடுபாட்டோடு பயிலும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள், அறிவியல் பேராசிரியர்கள் இந்த முகாம்களில் பங்கேற்பார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.kvpy.iisc.ernet.in/main/index.htm என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் மாதிரித் தேர்வு வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்யமுடியும். பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 1,055 ரூபாயும், SC/ST/PWD பிரிவினர் 528 ரூபாயும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.8.2015.
நுழைவுத் தேர்வு எந்த அடிப்படையில் நடைபெறும்?
இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 100 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். முதல் பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 20 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் தரப்படும். இதில் ஏதேனும் 3 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 10 வினாக்கள் வீதம் கேட்கப்படும். இப்பிரிவில், மாணவர்கள் ஏதேனும் இரண்டு பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். பிரிவு ஒன்றில் தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்ணும், பிரிவு இரண்டில் தவறான விடைக்கு 0.5 மதிப்பெண்ணும் குறைக்கப்படும். +2 பாடத் தரத்திலேயே கேள்விகள் அமையும். தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியாது.
கவனத்தில் கொள்க
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.8.2015
தேர்வுக்கான அட்மிட் கார்டு வழங்கும் நாள் 5.10.2015
தேர்வு நடைபெறும் நாள்: 1.11.2015