வந்தாச்சு கோடை வெயில். இனி இதன் உக்கிரத்திற்கு குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாக வேண்டும். இந்த கோடை உஷ்ணத்தின் தாக்கத்தை தவிர்க்க முடியாது.
இருந்தாலும், கோடை யிலிருந்து தப்பிக்க நமக்கு இயற்கை கொடுத்த கொட தான் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, நுங்கு, கொய்யாபழம், பலாப்பழம். இவற்றின் மூலம் கோடையை கூலாக எதிர்கொள்ளலாம். வெயிலின் கொடுமையால் இந்த பழங்களின் விற்பனையும் தெருவுக்குத் தெரு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும். அதற்கு ஈடு செய்ய தண்ணீர், பழச்சாறு அவசியம். அந்த பழ வகை கள் விலை குறைவாகவும், சத்துக்கள் அதிகமும் நிறைந்துள்ளது.
பலாப்பழம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் வெளித்தோற்றம்தான் கரடுமுரடு. ஆனால், இதன் சுவைக்கு ஈடு இணையில்லை. இதன் நிறமும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். விட்டமின் ஏ, சி அதிகம் நிறைந்துள்ள பலா உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கிறது. விட்டமின் ‘சி’ வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது.
இரும்புச்சத்து தைராய்டு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். ‘ஆன்ட்டி-ஆக்ஸிடண்டுகள்’ அதிகம் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
தர்பூசணி :
பளிச்சென்ற பச்சை மற்றும் சிவப்பு கெட்டப்பில் உள்ள தர்பூசணியை கோடையில் குளுகுளுனு இருக்க சாப்பிடலாம். இது தாகத்தை தணித்து, உடலுக்கும் நன்மையைத் தருகிறது. இதில் 92% தண்ணீர், 6% சர்க் கரை சத்துடன் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது.
இதிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் வெயிலில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். ‘சிட்ரூலின்’ என்ற சத்துப்பொருள் இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
வைட்டமின் பி6, பி1, பொட்டாசியம் என காணப்படும் தர்பூசணி வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும்.
முலாம்பழம் :
உடலை குளுமையாக்கவும், எப்போதும் எங்கேயும் கிடைக்கும் ‘எவர்க்ரீன்’ பழங்களுள் முலாம்பழமும் ஒன்று. இதில் 60% நீர்ச்சத்து உள்ளது. உடலில் உள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும். அதிக தாதுக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அல்சர் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் பூரண குணமாகும். முலாம்பழ ஜூஸ் நீர்வேட்கையை தணிக்கும்.
வெள்ளரி :
கோடையின் வெம்மை, நாவறட்சியிலிருந்து தப்பிக்க வெள்ளரிக்காய் சாப்பிடலாம். உடலின் சூட்டை தணிக்க வெள்ளரியை விட வேறு எதுவும் இருக்க முடியாது. இதில் வைட்டமின் பி, சி, மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணத்தை பெருக்கி, உடலுக்கு நல்ல இரத்தத்தைத் தரும் தன்மை கொண்டது வெள்ளரி.
உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக்கொள்ள வெள்ளரி உதவுகிறது.
கொய்யா பழம் :
குறைவான விலையில், பல நன்மைகளை கொண்ட கொய்யாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு. இதில் உள்ள வைட்டமின் பி, மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றது.
வைட்டமின் ஏ முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக வைத்திருக்கும்.
நுங்கு :
சம்மரில் மட்டுமே கிடைக்கும் இயற்கையின் அன்பளிப்பு நுங்கு. எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவு. இதில் கால்சியம், வைட்டமின் பி, தையாமின், ரிபோஃபிளாவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
இப்படி வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், இழந்த எனர்ஜியை பெறவும் இப்பழங்கள் ஏற்றது. அதை விடுத்து, வீணாக பணம் செலவு செய்து, ரோட்டோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜூஸ் மற்றும் கலர் கலராக பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களுக்கு ‘பை பை’ சொல்லித் தவிர்த்திட வேண்டும்.
என்ன வெயில் கொளுத்தினாலும் இனி கவலை இல்லை…கூல்!!!