இந்தியா உள்பட பல நாடுகளில் இளம்பெண்களை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் செய்திகள்தான் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக அமெரிக்காவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனை ஒரு இளம்பெண் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிவந்துள்ளது. இந்த தகவல் அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 28 வயது சண்டாயே மேரி கில்மான் என்ற பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த பெண் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வாலிபர் ஒருவர் களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வாலிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபருக்கு மேற்கொண்ட மருத்துவ சோதனை மற்றும் அந்த பெண்ணின் டி.என்.ஏ.வுடன் கூடிய ஆதாரமும் அந்த வாலிபரின் புகார் உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, சண்டாயே மேரி கில்மானை கைது செய்த போலீசார், அவர் மீது பாலியல் பலாத்கார பிரிவின்படி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து வரும் ஜூன் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தீர்ப்பில் குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறை தண்டனை மேரி கில்மானுக்கு விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.