எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெர்த் வசதி கொண்ட பெட்டிகள் பெருமளவு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மாற்றப்படும் என ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும், ரயில்வே துறையை நவீனமாக்கவும், அதேசமயம் பொருளாதார ரீதியில் ரயில்வே துறையை முன்னேற்றவும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்க இந்திய ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெர்த் வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறு முதல் எர்ணாகுளம் – நிஜாமுதீன் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 என்ற பெர்த் வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக குளிர்சாதன வசதியுள்ள பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இந்த மாற்றத்தினால் பெர்த் வசதி கொண்ட டிக்கெட்டுகளில் 72 டிக்கெட்டுக்கள் குறைகிறது. பெர்த் வசதி கொண்ட பயணத்திற்கு ரூ.925ம், குளிர்சாதன வசதி கொண்ட பயணத்திற்கு ரூ.2,370ம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்த பெட்டியில் இடம் ஒதுக்கியவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதே முறை சென்னை எக்மோர் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் முழுவதுமே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக படிப்படியாக மாற்றப்படும் என கூறப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றம் பணக்காரர்களுக்கு சொகுசு பயணமாகவும், ஏழை எளியவர்களுக்கு துயரப்பயணமாகவும் இருக்கும் என்பதால் இந்த மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது