இந்தியா தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கிடையே நேற்று டர்பன் நகரில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நிதானமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி 61 வது ஓவரில் நிறுத்தப்பட்டது.
தென்னாப்பிரிகாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, முதல் டெஸ்ட்டில் அபாரமாக விளையாடியும் போட்டி டிரா ஆனது. இந்நிலையில் நேற்று டர்பன் நகரில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தவான், மற்றும் முரளிவிஜய் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13.1வது ஓவரில் மார்க்கெல் பந்துவீச்சுக்கு தவான் 29 ரன்களில் ஆட்டமிழந்ததும் முரளி விஜய்யுடன் புஜாரே ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. முரளிவிஜய் 91 ரன்களுடனும், புஜாரே 58 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது மைதானத்தில் போதிய வெளிச்சமில்லை என்ற காரணத்தால் நடுவர்களால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று இரண்டாவது ஆட்டம் தொடரும் பட்சத்தில் முரளி விஜய் சதம் அடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.