காங்கிரசும் பாஜகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதால்தான் சோனியா காந்தி மீதான் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்க மோடி தயங்குவதாகவும், அதுமட்டுமின்றி மோடியின் ஊழல் ரகசியங்கள் அனைத்தும் சோனியா குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் அதனால்தான் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் சமீபத்தில் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களைத் தடுத்தி நிறுத்தி கைது செய்த போலீஸார், சிறிது நேரத்துக்குப் பிறகு விடுதலை செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “சோனியா குடும்பம் மற்றும் மோடி பற்றிய ரகசியங்கள் அவர்கள் இருவருக்கும் பரஸ்பரம் தெரியும்; சோனியாவையோ, ராபர்ட் வதேராவையோ கைது செய்தால், மோடி பற்றிய ரகசியங்களை காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கப்படுத்திவிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: சோனியா குடும்பத்தினர் மீது மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் மோடியின் ரகசியங்கள் அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.