சீடனிடம் அன்பு கொண்ட குரு

201601251245230421_Guru-to-disciple-with-love_SECVPF

நோயின் வீரியத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அந்த நேரத்தில் அவர் காசிப்பூரில் தங்கியிருந்தார். ராமகிருஷ்ணரின் சீடர்களில் பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குருவுக்கு தேவையான பணிவிடைகளை அவரது பக்கத்தில் இருந்து செய்து கொண்டிருந்தார்கள். ராம கிருஷ்ணரின் மீது அன்பு கொண்ட பலரும் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும், பின்னர் வீட்டிற்குச் செல்வதுமாக இருந்தார்கள்.

ராமகிருஷ்ணர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருடன் இருந்து அரிய சேவை செய்தவர்களில் சசிபூஷணர் என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை ராமகிருஷ்ணருடைய கழிவுக் கோப்பை ஒன்றைச் சுத்தம் செய்துகொண்டு வருவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார் சசிபூஷணர். அது ஒரு குளிர்காலம். குளிரைப் பொருட்படுத்தாமல், அந்த நள்ளிரவில் ‘குரு தூங்கத்தானே செய்கிறார்’ என்ற நம்பிக்கையில்தான், கழிவுக் கோப்பையை சுத்தம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றிருந்தார்.

கோப்பையை சுத்தம் செய்து முடித்ததும், உடனடியாக குருவுக்கு அருகில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரமம் திரும்பினார். கோப்பையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, குரு தூங்கிக் கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றார் சசிபூஷணர். அப்போது அவர் கண்ட காட்சி, அவரை கலக்கம் கொள்ளச் செய்தது; நெஞ்சம் துடி துடித்தது.

படுக்கையை விட்டு எழுந்திருக்க சக்தி இல்லாமல், படுத்த படுக்கையாக இருந்த ராமகிருஷ்ணர், கோல் ஊன்றியபடி தட்டுத் தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் நடந்து செல்லும் திசையை நோக்கிப் பார்த்த சசிபூஷணருக்கு புரிந்து போனது. தன் குரு, குளிரின் தாக்கம் தாங்காமல், போர்வை ஒன்றை எடுக்கத்தான் அவ்வளவு கஷ்டப்பட்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதை கணித்தார் சசிபூஷணர்.

அவரது உள்ளம், ‘குருவிற்கான தேவையை சரியாக கேட்காமல், தான் கழிவுக் கோப்பையை சுத்தம் செய்யச் சென்றது தவறோ?’ என்று எண்ணியது. ‘குருவுக்கு போர்வை தேவைப்பட்டிருக்கிறது. அவருக்கு ஏதாவது தேவையா? என்று கேட்டறிந்த பிறகு நான் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், குருதேவர் இப்படி கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்காதே!’ என்று நினைத்து கண்ணீர் சிந்தினார்.

மறுகணம் அவர், ராமகிருஷ்ணரிடம் ஓடிச் சென்று அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். பின்னர், ‘குருவே! போர்வை ஒன்று எடுத்துக் கொடுத்து விட்டுப் போ!’ என்று நீங்கள் எனக்கு கட்டளையிட்டிருந்தால், நான் கொடுத்து விட்டுப் போயிருக்க மாட்டேனா?. நானும் கூட கவனக்குறைவால் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க மறந்து விட்டேன். அதனால்தான் நீங்கள், இவ்வாறு இயலாத நிலையிலும் எழுந்து நடமாடும்படி ஆகிவிட்டது’ என்று கூறி தனது வருத்தத்தை தெரிவித்தார் சசிபூஷணர்.

ராமகிருஷ்ணர், தனது சீடனின் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கூறினார். ‘மகனே! எனக்காக, என் நோயின் பொருட்டு நீ என்னுடன் எப்போதும் இருந்து என்னைக் கவனித்து வருகிறாய். இப்போது குளிர்காலமாக இருக்கிறதே! நீ போதிய போர்வை இல்லாமல் வெளியே சென்றாய் அல்லவா?. அப்போது குளிர் என்னைத் தாக்கியது போல உணர்ந்தேன். உனக்கு போர்வை எடுத்துத் தருவதற்காகத்தான் நான் எழுந்தேன்’ என்றார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய சீடர்களிடம் கொண்டிருந்த அன்பானது, எப்படிப்பட்டது என்பதை இந்த ஒரு சம்பவம் எடுத்துக் கூறும் வகையில் இருக் கிறது. ராமகிருஷ்ணர் தன்னுடன் இருந்த ஒவ்வொரு சீடர்களிடமும் இதே போன்ற அன்புடன் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply