வயது வந்தவர்கள் ஆபாச படம் பார்ப்பது அவர்களது உரிமை. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 வயது நிரம்பிய ஒருவர், தனி அறையில் உட்கார்ந்து ஒருவர் ஆபாச படம் பார்ப்பது அவரது தனிப்பட்ட உரிமை என்றும், அதை தடுக்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆபாசப் பட இணைய தளங்களுக்கு பெருகிவிட்டதாகவும், அதனால் இளையதலைமுறைகள் சீரழிவதாகவும் எனவே இந்தியாவில் ஆபாசப்படம் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சுமார் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும், ஆபாச இணைய தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக ஆபாச இணைய தளங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, “இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் தனது தனி அறைக்குள் ‘போர்னோ’ இணைய தளங்களை பார்ப்பது அவரது அடிப்படை உரிமை ஆகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி ‘வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் ‘போர்னோ’ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 ன் படி தனிநபர் உரிமையை மீறுவதாகும்’ எனக் கூற வாய்ப்புள்ளது. இதனால், வயது வந்த நபர் ஒருவர் தனி அறைக்குள் ‘போர்னோ’ படத்தை பார்ப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது.
அதேவேளையில், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே தீர வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இதுகுறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.