நாம் தமிழ்ர் கட்சியின் நிறுவனர் சீமான், இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கபோகிறார் என்பது குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை. அதனால் வரும் தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று கூறிய சீமான், அதே நேரத்தில் ஒருவேளை ஜெயலலிதா இப்போது சொன்னதை எல்லாம் செய்யவில்லை என்றால், எங்கள் கொள்கைக்கு ஒத்துவரவில்லை என்றால் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவையும் சேர்த்தே ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தி, நரேந்திரமோடி இருவருமே தகுதியற்றவர்கள் என்று கூறும் சீமான், வி.பி.சிங் போன்ற ஒரு தன்னிகர் இல்லாத தலைவர்தான் இந்தியாவை ஆள வேண்டும் என்றார்.
வைகோ பாரதிய ஜனதா கூட்டணிக்கு சென்றது ஒரு வரலாற்று பிழை என்றும், அவர் கூடியவிரைவில் தனது தவறை புரிந்துகொண்டு பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வருவார் என்றும் கூறினார்.
ஈழத்தமிழர்களை வைத்து நாங்கள் பிழைப்பு நடத்துவதாக எங்களை குற்றம் சாட்டும் விஜயகாந்த் கட்சியின் 14 தொகுதிகளிலும் அவரது வேட்பாளரை தோற்கடிப்பதே எங்கள் தலையாய வேலை என்று ஆவேசமாக கூறினார்.