கமல், ரஜினிக்கு உள்ள உணர்வு கூட ஏன் முதல்வருக்கு இல்லை? சீமான் கேள்வி

கமல், ரஜினிக்கு உள்ள உணர்வு கூட ஏன் முதல்வருக்கு இல்லை? சீமான் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துக்கம் முடிவதற்கு முன்னர் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் எப்படி பதவி ஏற்க முடிந்தது. அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் இறந்தபோது தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். பின்னர் துக்கம் முடிந்ததும் முறைப்படி முதல்வர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஓபிஎஸ், ஜெயலலிதா இறந்த ஒருசில நிமிடங்களில் முதல்வராக பதவியேற்றார் இது எப்படி முடிந்தது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். ” 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்க மாட்டார்கள். ஆட்சி நிறைவடைய இன்னும் நான்கரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இவர்களை விட்டால் வேறு யாருமில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகப்படியான அதிகாரிகளை இவர்கள்தான் நியமனம் செய்தார்கள். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். மீதமுள்ள ஆட்சி காலத்தைப் பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றுதான் பார்க்கிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளன்று எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டினார்கள்? அவர் இறந்தபோது எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன? அப்படியானால் இவர்கள் அனைவரும் பதவிக்காக இவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்தார்களா? அவர் இறந்த அடுத்த நொடியிலேயே காட்சிகள் மாறிவிட்டன. ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்கள். அவர் சிறையில் இருந்தபோது, ‘நம்மைப் பார்ப்பார்’ என்ற காரணத்துக்காக, அழுது புரண்டு ஒப்பாரி வைத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தது ஏன்?” என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

” முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. ‘ அவர் முழுக்க குணமாகிவிட்டார்; 15 நாளில் வீடு திரும்புவார்’ என்றார்கள். மேலும் 15 நாட்கள் என்றால் இன்னும் நன்றாகத்தானே குணமடைந்திருக்க வேண்டும். திடீரென்று உயிர் போகும் அளவுக்குப் பலவீனம் எப்படி ஏற்பட்டது? அப்படியானால் இதுவரையில் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் தவறா? என் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிறேன் என்றால், யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார். அவருக்காக ஓட்டுப் போட்ட ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. ‘மருத்துவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று சொன்னார்கள். அதைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கலாம். அப்படி வந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது. அப்போலோவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பத்திரிகையாளர் சோவுக்கு வைத்தியம் பார்த்ததற்கான அடையாளமாக சிரின்ஜ் ஏற்றிய சுவடுகள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு அப்படி எதேனும் சுவடுகள் தென்பட்டதா? அவரது கன்னத்தில் எம்பால்மிங் செய்ததற்கான குழிகள் இருக்கின்றன. அதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏன் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவில்லை?

எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தபோதுகூட அவர் தொடர்பான படங்கள் வெளியானது. ஜெயலலிதா விஷயத்தில் யாருமே அவரைப் பார்க்கவில்லை. ஆளுநரோ ராகுலோ யாருமே அவரைச் சென்று சந்திக்கவில்லை. ‘முழுக்க குணமாகிவிட்டார்’ என பிரதாப் ரெட்டி சொன்னது உண்மையா? முழுக்க குணமான உடலில் திடீர் பழுது எப்படி வந்தது? இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? ‘அவருடைய வெற்றிக்கு சசிகலா துணையாக இருந்தார்’ என்கிறார்கள். இதை ஏன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இந்தத் தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசவில்லை? ‘ அவர் செய்தது மிகப் பெரிய தியாகம்’ என்கிறார்கள். ஒருவருக்குத் தோழியாக இருப்பதே தியாகம் என்றால், இந்த நாட்டுக்காக செக்கிழுத்து, சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் மண்ணெண்ணெய் விற்று இறந்து போன வ.உசிக்கு என்ன பெயர்? செல்வந்தராகப் பிறந்து சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட்டு காவி வேட்டி அணிந்து வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவருடைய தியாகத்துக்கு  என்ன பெயர்? ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேச விடுதலைக்காக சிறையில் இருந்தார் காமராஜர். அவரை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?

ஜெயலலிதா உடலைப் பார்த்து, அப்பாவி மக்கள்தான் கதறியபடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓர் அமைச்சர் கதறியதைக்கூட கண்ணால் பார்க்க முடியவில்லை. ஓர் எம்.எல்.ஏ, ஒரு மாவட்டச் செயலாளர் என ஒருவராவது மொட்டை அடித்தார்களா? சாமி வரம் கொடுக்கும் வரையில்தான் நல்ல சாமி என நினைத்து இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உளவியல்ரீதியாக இந்த அமைச்சர்கள் எப்படி இதைக் கடந்து போகிறார்கள். அவர்களுக்கு நிம்மதியாகத் தூக்கம் வந்திருக்கலாம். அன்று இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. தூரத்தில் இருந்த நமக்கே இப்படி என்றால், அருகில் இருந்தவர்கள் ஜெயலலிதா இறப்பை, ஒரு பெரிய இழப்பாகவே காட்டிக் கொள்ளவில்லை. அப்படியானால், அவரது மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. 1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணாதுரை இறந்து போனார். உடனே யாரும் பதவியேற்கவில்லை. தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். அவரை அடக்கம் செய்த பிறகே, முதலமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் இறந்தபோதும் தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியனை அறிவித்தார் ஆளுநர் குரானா. அதன்பிறகு கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி வி.என்.ஜானகியை தேர்வு செய்தார்கள். தற்போது ஜெயலலலிதா மரணத்துக்குப் பிறகு ஏழு நாள் துக்கத்தை அரசு அறிவித்தது. அதன்பிறகு, ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தால், எல்லாம் இயல்பாக நடந்திருக்கும். உயிர் போன அடுத்த நொடியில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பது என்பது என்ன மாதிரியான மனநிலை? அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஒரு மனிதனாக தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போது எப்படி நினைப்பது? ஒரு வீட்டில் துக்க காரியம் நடந்தால் ஓர் ஆண்டுக்கு எந்த நல்ல காரியமும் நடப்பதில்லை.

கமலஹாசன் செவாலியே விருதை வாங்கிக் கொண்டு வருகிறார். அந்த விருதை வாங்கியதற்காக கேரள முதல்வர் வாழ்த்தினார். ஜெயலலிதா வாழ்த்தவில்லை. ஆனால், ஜெயலலிதா உடல்நிலையைக் காரணம் காட்டி தன்னுடைய பிறந்தநாளைத் தள்ளிப் போட்டார் அவர். ரஜினிகாந்த், ‘பிறந்தநாளையே கொண்டாட வேண்டாம்’ என்றார். சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தங்களுடைய நிகழ்வுகளை ரத்து செய்கின்றனர். ஜெர்மன் பயணத்தை ரத்து செய்தார் தமிழிசை. உங்களால் மட்டும் இறந்த அடுத்த நொடியில் எப்படி பதவியேற்க முடிகிறது ஓ.பி.எஸ்? இந்தக் காட்சிகளைப் பார்க்கும் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மனநிலைக்கு ஆளாவான்? இருக்கும் வரையில் புரட்சித் தலைவி அம்மா, டாக்டர், தங்கத் தாரகை, இதய தெய்வம் என்றெல்லாம் அழைத்தீர்கள். இறந்தவுடன், செல்வி ஜெயலலிதா என்கிறார்கள். யார் மரணம் அடைந்தாலும், எப்படி நடந்தது என எல்லோரும் கேட்பார்கள். அதுபோன்ற ஒரு விசாரணைகூட வேண்டாம் என்றால் எப்படி? ‘அதிகாரம் மிக வலிமையானது’ என அம்பேத்கர் சொல்வார். ஆனால், அதிகாரம் மிகக் கொடுமையானது என்பது ஜெயலலிதாவின் இறப்பின்போதுதான் உணர முடிகிறது. ‘இறந்து போனவர் திரும்பி வரவா போகிறார்’ என திருநாவுக்கரசர் கேட்கிறார். அதையே நானும் கேட்கிறேன். ‘என் இனத்தையே போர் தொடுத்து அழித்த ராஜிவ்காந்தி திரும்ப வந்துவிடுவாரா?

ஜெயலலிதா அவர் உயிரோடு இருந்த வரையில், மத்திய அரசின் நீட் தேர்வு, சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி), உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். காரணம். ‘மாநில உரிமைகளுக்காக நிற்கின்ற கட்சி அ.தி.மு.க. மாநில நலனை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களை ஏற்க முடியாது’ என அறைகூவல் விடுத்தார் ஜெயலலிதா. ஆனால், அவர் உடல் நலமில்லாமல் போனபோது, கட்சியின் பொதுக்குழு கூடி அறிவிக்காமல் முதல்வரின் அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினார் ஆளுநர். அடுத்த ஒரு வாரத்தில் இந்த நான்கு திட்டங்களிலும் எதிர்ப்பில்லாமல் தமிழக அரசு இணைந்துவிட்டது. கட்சியின் தலைவர் எதிர்த்த ஒன்றுக்காக, பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் கையெழுத்துப் போடுகிறார். ஒருவேளை அவர் சிகிச்சை முடிந்து மீண்டு வந்திருந்தால், இதையெல்லாம் எதிர்த்தது போல் நடித்தீர்களா எனக் கேள்வி கேட்டால், ஜெயலலிதாதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்த ஒன்றுக்கு கையெழுத்து போடுகிறீர்கள் என்றால், அவர் திரும்பி வர மாட்டார் என முடிவு செய்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

ஜெயலலிதா இறந்தபோது ஒரே நாளில் அடக்கம் செய்துவிட்டார்கள். அந்தக் குழியில் அதே அளவுக்கான சிமென்ட் கல் குறுகிய காலத்துக்குள் யார் தயாரித்தது? அதை பாலிஷ் போடுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்கும்? முதல்வரின் உடல் அளவுக்கு சந்தனப் பேழையை எங்கு தயார் செய்தார்கள்? மாலை நான்கரை மணிக்குள் சந்தனப் பேழையைத் தயாரிக்க முடியுமா? உடற்கூறு ஆய்வும் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாளிலேயே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்க் பதிவு செய்தார்கள். இப்போது அதே இடத்தில்தான் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல் எப்படிக் கடந்து போக முடியும்? மிகுந்த வலியோடுதான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். யாரிடமும் கேட்க வழியில்லாமல் எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு காலம் ஒரு மனுஷியை நேசித்ததாகக் காட்டியது எல்லாம் வேடமா? ஒரேநாளில் வேறு ஒருவரின் படத்தை நெஞ்சுக்குள் எப்படி செருக முடிந்தது? இதை தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்”

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply