72 வயதிலும் மின்னல் வேக டைப்பிங்: சேவாக் பாராட்டு
72 வயது ஆன போதிலும் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டுவிட்டரில் பாராட்டி கௌரவப்படுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரு டைப்-ரைட்டிங் மிஷனுடன் லட்சுமி வெர்மா என்ற 72 வயது பெண் டைப்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல பணி மேற்கொண்டிருந்த அவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. சமூக வலைதளங்களிலும், உள்ளூர் மீடியாவிலும் லட்சுமி வெர்மா வைரலாகியிருந்தார்.
இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். நேற்றைய இதற்கு காரணம், யாரோ ஒருவர் லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது டுவிட்டரிலும் வைரலானது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக்கும், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி குறித்து தகவலை பதிவுசெய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆச்சரியப் பெண்மணி. மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை ஆகியவற்றைத் தான். இவருக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
A superwoman for me. She lives in Sehore in MP and the youth have so much to learn from her. Not just speed, but the spirit and a lesson that no work is small and no age is big enough to learn and work. Pranam ! pic.twitter.com/n63IcpBRSH
— Virender Sehwag (@virendersehwag) June 12, 2018