செலவைக் குறைக்கும் வீட்டுத் தொழில்நுட்பங்கள் !!!

house_loan_2106263f

நமது அடிப்படையான ஆசைகளில் முதன்மையானது வீடு தொடர்பான ஆசை. எப்படியாவது சொந்தமாக ஒரு வீட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பிரயாசைப்படுகிறோம்.

வீடு கட்ட ஆசைப்பட்டாலும் அதற்கான செலவு நமது ஆசையைக் கட்டுப்படுத்திவிடுகிறது. அதை மீறி கடனை உடனை வாங்கி வீடு கட்டினாலும் அதை எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாகக் கட்ட வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கனமாகக் கட்டப் பிரியப்படுகிறோம்.

இந்தியாவில் கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்தும் அநேக வழிமுறைகள் உள்ளன என்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள். மேலும் இவை ஆற்றலை மிச்சப்படுத்தவும், எளிதில் அணுகும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் நன்கு அறியப்பட்ட லாரி பேக்கர் கட்டுமானச் செலவைக் குறைத்துச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டும் உத்தியையும் பரவலாக்க முயன்றவர். பொதுவாகக் கட்டுமானச் செலவைக் குறைக்கும் முயற்சியில் அடிப்படையான விஷயம் தகுந்த கட்டுமானப் பொருள்களைக் கையாள்வது. நாம் வீடு கட்டும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது என்பது பெருமளவில் செலவைக் குறைக்கும் ஒரு வழிமுறை.

இந்தியாவில் வீடு கட்டப் பயன்படும் அடிப்படையான கட்டுமானப் பொருள்கள் செங்கல், மரம், கல் போன்றவையே. வீடு கட்டுவதில் பிரதான செலவுகள் என்பவை கட்டுமானப் பொருள்களுக்கானவையும் வீடு கட்டுவதற்கானவையுமே. சிறிய வீடு என்றால் செலவாகாது என நம்புகிறோம். ஆனால் வீட்டின் சதுர அடி குறையக் குறைய வீடு கட்டுவதற்கான சதுர அடிச் செலவு அதிகரிக்கும்.

1_1938054g

இவையெல்லாம் அடிப்படையான காரணிகள். இவற்றைத் தொடர்ந்து கட்டுமானத் தொழில்நுட்பங்கள் மூலம் கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிமுறைகள் வருகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளை சென்ட்ரல் பில்டிங் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயரிங் ரிஸர்ச் சென்டர், ரீஜினல் ரிஸர்ச் லேபரேட்டரிஸ் போன்றவை மேற்கொண்டுவருகின்றன.

கட்டுமானப் பொருள்கள்

கட்டுமானப் பொருள்களைப் பொறுத்த அளவில், ஸ்டெப்ளைஸ்டு கம்ப்ரஸ்டு எர்த் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ் ஜிப்சம் ஸ்டெப்ளைஸ்டு மட் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ்-லைம் ஜிப்சம் தயாரிப்புகள், க்ளே ரெட் மட் பர்ன்ட் செங்கல், கான்கிரீட் ப்ளாக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.

அஸ்திவாரத்தை எழுப்ப ஆகும் செலவு வீட்டின் மொத்தக் கட்டுமானச் செலவில் 10 முதல் 15 சதவீதம்வரை பிடித்துக்கொள்கிறது. ஆகவே செம்மண் போன்ற சாதாரண மண் கொண்ட நிலத்திற்கு இரண்டு அடிகள் ஆழ அஸ்திவாரம் போதுமெனவும் ஆர்ச் பவுண்டேஷன் முறையைக் கையாள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. கரிசல் மண் போன்ற மென்மையான மண் கொண்ட நிலத்தில் அண்டர் ரீம் ஃபைல் பவுண்டேஷனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. இதன் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் செலவில் 20-25 சதவீதத்தை மிச்சப் படுத்த முடியும் என்றும் கூறுகிறது.

செலவைக் குறைக்கும் அஸ்திவாரங்கள்

ஆர்ச் பவுண்டேசன் என்பது பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறை. இம்முறையில் அஸ்திவாரத்தின் ஆழத்தைப் பெருமளவில் குறைத்துவிடலாம். என்றாலும் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியைத் தாங்கு சுவரெழுப்பிப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்டிடத்தின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அஸ்திவாரம் உறுதியுடன் விளங்க இது அவசியம்.

நில மட்டத்திற்கு மேல் ஒரு அடி உயரத்திற்கு 1:6 என்னும் விகிதத்திலான சிமெண்ட் கலவையால் ஆன அடிப்பீடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக அடிப்பீடம் அமைக்கப் பயன்படும் நான்குக்கு ஆறு அங்குலம் என்னும் அளவிலான ஸ்லாபுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பதில் செங்கற்களைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பயன்படுத்தினால் அஸ்திவாரச் செலவை 35-50 சதவீதம் குறைக்கலாம்.

சுவரும் கூரையும்

சுவர்களைப் பொறுத்தவரை எலிப்பொறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுவர்களுக்கு உறுதி கூடும். கிராதி செங்கற்களையும் சுவர்களுக்குப் பயன்படுத்தலாம். வெப்ப மயமான இடங்களில் வழக்கமான செங்கற் களால் சுவர்களை எழுப்புவதைவிட கிராதிச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது செலவும் குறையும் வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும்.

bamboo2_2192994g

கூரைகளைப் பொறுத்தவரை, வழக்கமாக ஆர்சிசி ஸ்லாப்பைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஃபெர்ரோ சிமெண்ட் சேனல், ஜாக் ஆர்ச், ஃபில்லர் ஸ்லாப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் ஆர்சிசி ஸ்லாப்களில் அதிகமான அளவுக்கு கான்கிரீட் வீணாகிறது மேலும் இந்த ஸ்லாப்கள் காரணமாகக் கட்டிடத்தின் சுமையும் கூடுகிறது. எனவே எடை குறைவான பொருள்களைக் கொண்டு கட்டிடத்தின் கூரையை அமைப்பதன் மூலம் செலவையும் குறைக்கலாம். கட்டிடத்தின் சுவர்கள் வழியே அஸ்திவாரத்திற்குக் கடத்தப்படும் எடையும் குறையும். ஃபில்லர் ஸ்லாப்களைப் பயன்படுத்திக் கூரையை அமைக்கும்போது 15-25 சதவீதம் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால் தகுந்த வடிவமைப்புப் பொறியாளரின் பரிந்துரையின் பேரிலேயே கட்டுமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி நம் நாட்டில் கிடைக்கும் பல தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீடு கட்டும்போது வீட்டின் கட்டுமானச் செலவு பெருமளவில் குறைவதுடன் பசுமையான சூழல் கொண்ட கட்டிடத்தையும் உருவாக்க முடியும். வழக்கமான வீடுகளையே அதிகச் செலவில் கட்டுவதை விடுத்து செலவு குறையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மாற்றுச் சிந்தனை அவசியம். அத்துடன் சிறிது துணிச்சலும் இருந்தால் விலை குறைவான ஆனால் உறுதியான சூழலுக்கு உகந்த வீட்டை எளிதில் கட்டி முடிக்கலாம்.

Leave a Reply