முதல்வர் ஓபிஎஸ் அணியில் செம்மலை. ஆதரவு எண்ணிக்கை மொத்தம் 9
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளதால் ஓபிஎஸ் அணியின் ஆதரவு எண்ணிக்கை 9ஆக மாறியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா தலைமையில் இரு அணிகளாகப் பிரிந்தது. இருவரும் ஆளுநரைச் சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் கவர்னர் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று வரை எட்டு எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று காலை முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று தன் ஆதரவைத் தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் அணிக்கு மொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஏற்கனவே அவருக்கு 12 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..