பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 100 ராகுல் காந்திகளை கொண்டு வந்து நிறுத்தினாலும் அவருக்கு இணையாக யாரும் வர முடியாது என காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடியின் அரசை ‘சூட் பூட் சர்க்கார்’ என்று ராகுல் காந்தி விமர்சித்தும், அதற்கு பிரதமர் மோடி சூட்கேஸ் சர்க்காரை விட சூட் பூட் சர்க்கார் மேல் என பதிலடி கொடுத்ததும் தெரிந்ததே. இந்நிலையில் ராகுல்காந்தியை அதிரடியாக தாக்கும் விதமாக சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியதாவது: “56 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல் வெளியே செல்வதிலும் பேசுவதிலும் ஈடுபடுகிறார். ராகுலின் நடவடிக்கை காங்கிரஸ்காரகளை கொஞ்சம் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த உற்சாகும் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான் கேள்வி. பிரதமர் மோடி என்கிற பேரலைக்கு முன்னர் 100 ராகுல் காந்திகள் சேர்ந்தாலும் இணையாக முடியாது.
2ஜி அலைகற்றை, சுரங்க ஊழல், நிலக்கரி ஊழல் ஆகிய ஊழல்களை செய்து பெருமளவில் கொள்ளையடித்து சூட்கேஸ் நிரப்பியவர்களை ‘சூட்கேஸ் சர்க்கார்’ என்று பிரதமர் மோடி தெரிவித்தது முற்றிலும் உண்மையானது” என்று அதன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.