36 வருடங்கள் பிரிந்த குடும்பத்தினர்களை இணைத்த வாட்ஸ்-அப்.

[carousel ids=”67762,67763″]

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த போரின்போது பிரிந்து ஒரு குடும்பம் 36 வருடங்கள் கழித்து வாட்ஸ் அப் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே திவிரமாக போர் நடந்தபோது இலங்கை கண்டி பகுதியில் வாழ்ந்த சாமுவேல்,  தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து, திருச்சியில் தங்கினார். இவருடைய சகோதரி ஞானப்பூ என்பவர் இவர் தமிழகத்திற்கு வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், தனது சகோதரி தமிழகத்தில் எந்த பகுதியில் வசித்து வருகின்றார் என்கிற விபரம் சாமுவேலுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் சாமுவேலின் மருமகள் ஆசிரியர் சுகந்தி, சாமுவேல் படத்தையும், அவருடைய சகோதரி ஞானப்பூவை  படத்தையும்,  வாட்ஸ்-அப்பில் போஸ்ட் செய்து இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்ததால் தொடர்பு கொள்ளும்படியும் தனது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த தகவல் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவியது.

இந்நிலையில் ஞானப்பூவை அவரது தம்பி தேடி வருவதை வாட்ஸ் அப் மூலம் அறிந்த, ஞானப்பூவின் மகன் லாசர் உடனே வாட்ஸ் அப்பில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டார். ஞானப்பூ இலங்கையிலிருந்து தமிழகம் வந்தபோது, குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கானம் கிராமத்தில் இத்தனை வருடங்களாக குடியிருந்ததும் சாமுவேல் குடும்பத்திற்கு தெரிய வந்தது.

அதன்பிறகு நேற்று ஆறுமுகநேரியிலிருந்து ஞானப்பூ, அவரது மகன்கள் லாசர், ஜெயராஜ் ஆகியோர் திருச்சி வந்தனர். 36 ஆண்டுகளுக்கு பிறகு தம்பி மற்றும் தங்கையை கண்ட ஞானப்பூ பாசத்துடன்  உறவுகளை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இதேபோல் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். பாசத்தின் அடையாளமாக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி சந்தோசத்தை பறிமாறிக்கொண்டனர்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சாமுவேலின் அக்கா ஞானப்பூவின் மகன் லாசர், “எங்கள் தாய் நாடான இலங்கையில் போர்  ஆரம்பித்த காலக்கட்டத்தில் எனது தந்தை, அம்மாவுடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டர். உடன் பிறந்தவர்களை பிரிந்து எங்கம்மா அடிக்கடி தம்பி, தங்கச்சியை பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நாங்களும் எங்கெல்லாம் தேடி அழைந்தோம். தகவல் இல்லை. 36 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் மூலமாக  எங்க குடும்பம் சேர்ந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு.. எங்கப்பா ராஜய்யா உயிரோடு இருந்திருந்தா  கொஞ்சம் நிம்மதியா இறந்திருப்பார். ஆனாலும் இப்போவாவது எனக்கு மாமன், சித்தி கிடைச்சாங்களேன்னு மகிழ்ச்சியாக இருக்கு” என்றார் கண்ணீருடன்.

அக்காவை சந்தித்த சந்தோசத்தில் சாமுவேல் பேசமுடியாமல் கண்ணீருடன், “வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பரப்பிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்”
என கையெடுத்து கும்பிட்டார்.

ஃபாஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ஆகியவைகளால் ஒருசில தீமைகள் இருந்தாலும் இதுபோன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இதுபோல் ஆக்கபூர்வமான விஷயங்களை சமூக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டால் அனைவரும் நன்மை பெறலாம்.

Leave a Reply