திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன்–சுந்தரி தம்பதிகளுக்கு சரவணன் (33), ரவிச்சந்திரன் (31), பார்த்திபன் (30), கோபி (27), சிகாமணி (23), ஏழுமலை (21) ஆகிய 6 மகன்கள். கடந்த 1999–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுந்தரியும், தாமோதரனும் குடும்பத்தோடு புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றனர்.
அப்போது அருகில் உள்ள மாமா வீட்டுக்கு தனியாக சென்ற சிகாமணி வழி தெரியாமல் எங்கேயோ சென்று விட்டார். இதனையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் பலனில்லை. காவல் நிலையத்தில் புகார் செய்தும் பார்த்தனர்.ஆனாலும் எந்த வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
வழி தவறி சென்ற சிகாமணி குடும்பத்தை பிரிந்து தொண்டு நிறுவன விடுதியில் வாழ்ந்துவந்துள்ளார். தற்போது அவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர் வாட்ஸ் அப் மோகத்தால் அதில் இணைந்துள்ளார். அதில் தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளார். அதன்படி தனது குரலை பதிவு செய்து வாட்ஸப்பில் அனுப்பியுள்ளார். வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் பரவிய இந்த தகவல் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வாட்ஸப்பில் பார்த்தார். சிகாமணியை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் நன்கு அறிந்த அவர் சுந்தரியிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து உடனடியாக சிகாமணியை தொடர்புகொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து வாட்ஸ்–அப் உதவியால் சிகாமணி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சிடை ஏற்படுத்தியது.