பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி தாக்குதலை அடுத்து அந்நாட்டு அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டிவருகிறது. இதன்படி கடந்த 2008ஆம் ஆண்டுமுதல் தூக்கு தண்டனை பெற்றும், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை வரிசையாக தூக்கிலிட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் இதுவரை தண்டனை விதிக்கப்பட்ட 10 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மேலும் 7 பேர் தூக்கிலிடப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள், அதே ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரியை கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த ஏழு பேர்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் பாகிஸ்தானில் மொத்தம் 17 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் அட்டகாசம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.