தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பள்ளி மாணவர்கள் உள்பட 476 பயணிகளுடன் சென்ற செவால் என்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து, 300 பேர் உயிரை பலி வாங்கியது. இந்த விபத்தில் பயணிகளை காப்பாற்ற எவ்வித முயற்சியும் செய்யாமல் முதல் ஆளாக தப்பித்து வந்த கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. எனினும், அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த விபத்து தொடர்பாக, கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடியாக தங்கள் தீர்ப்பு வழங்கியது.
அதில், செவால் படகின் கேப்டன் ஜன்-சியோக் (69), படகிலிருந்தவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் செயல்பட்டார் என்பதை நீதிமன்றம் ஏற்க மறுத்து அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.
எனினும், பயணிகளைத் தவிக்க விட்டுவிட்டு படகிலிருந்து தப்பிச் சென்றதற்காகவும், பணியில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றத்துக்காகவும் அவருக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜன்-சியோக் மீதான கொலைக் குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, விபத்தில் பலியான மாணவர்களின் உறவினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்