வாழைத்தண்டில் இருந்து ஷாம்பூ. இந்தியாவிலேயே முதல் முயற்சியில் வெற்றி பெற்ற தமிழர்.

banana stemஇந்த உலகில் வேண்டாம் என்று வீணடிக்க எதுவுமில்லை. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் எல்லாவற்றையுமே காசாக்கலாம் என்பதற்கு நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஒரு நல்ல உதாரணம். இவர், வாழைத்தோட்டத்திலிருந்து தூக்கியெறியப்படும் பொருட்களைப் பயன்படுத்தி நல்ல வருமானம் ஈட்டு கிறார். இதுபற்றி அவரிடமே கேட்டோம்.

‘‘நான் ஒரு வாழை விவசாயி. எனக்கு இரண்டு ஏக்கரில் வாழைத்தோட்டம் இருக்கிறது. அதில் செவ்வாழை பயிரிட்டுள்ளேன். செவ்வாழையில் பழத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பூ, தண்டு போன்றவற்றை பயன் படுத்த முடியாது.

மாற்றியோசித்தேன்!

எங்கள் மாவட்டத்தில் வாழை விவசாயிகளுக்கு என்று 110 குழுக்கள் வரை உண்டு. அதில் எங்கள் குழுவும் ஒன்று. இந்தக் குழுவுக்கு நான் தலைவராக இருப்பதால், விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய விதத்தில் ஏதாவது செய்ய முடியுமா என யோசித்தேன்.

அப்போதுதான் வாழைத் தோட்டங்களில் வீணடிக்கப்படும் பூ, தண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி, மக்கள் விரும்பும் சுவையில் வித்தியாசமான உணவுப்பொருட்களை தயாரித்து விற்கலாம்; இவை மூலம் சிலருக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுத்தர முடியுமென நினைத்து களத்தில் இறங்கினேன்.

nav44cபலவகை வாழைப்பூ புராடக்ட்!

இந்தியாவிலேயே முதன்முதலில் வாழைத்தண்டை வைத்து ஷாம்பூ தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறோம். இதுமட்டுமல்லாமல் வாழைக்காய் ஊறுகாய், சத்துமாவு, சிப்ஸ், வடகம், வடமாவு, இனிப்பு வகைகளை முதல் முயற்சியாக தயாரித்துள்ளோம். வாழைப்பூ வடமாவை வைத்து பக்கோடா மற்றும் வடை தயாரிக்கலாம். இதனோடு வாழைப்பழ மிட்டாய், வாழைப்பழ அல்வா மற்றும் ஜூஸ் என்று ஏறக்குறைய 13 புராடக்ட்கள் வரை தயாரிக்கிறோம். இதனை கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்.

மாதம் ரூ.6,000 லாபம்!

ஆரம்பத்தில் இதில் எனக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமுயற்சி செய்து இதனை லாபகரமாக மாற்ற வேண்டும், விவசாயிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வத்தில் என் முயற்சியைத் தொடர்ந்தேன். என் குழுவில் உள்ளவர் களும் மற்ற குழுவினரும் நல்ல ஆதரவு தந்தனர்்.

பொதுவாக, தார் வெட்டிய இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நமக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துவிட வேண்டும். இல்லையெனில், அது அழுகிவிடும். குழுவில் இருப்பவர்களே மூலப்பொருட்களை தந்துவிடுவதால், எங்களுக்கு இதில் எந்த சிரமும் இல்லை. பெரும்பாலும், நானே வாழைத் தோட்டங்களுக்குச் சென்று பொருட் களைக் கொண்டு வருவேன். இதற்கான மூலப்பொருட்கள் வாழை மரத்தி லிருந்து கிடைக்கும் பொருட்கள்தான் என்றாலும் இடுபொருட்கள் சேர்ப்பதன் விலை அதிகமாக இருப்பதாலும் எங்களுக்கு லாபம் கிடைப்பதில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. தற்போது எல்லா செலவுகளும் போக மாதம் 6,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

சலுகை கிடைப்பதில்லை!

அரசு சலுகைகள் பல அறிவித்திருந் தாலும், என்னைப் போன்ற சாதாரண விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை. எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்தால் நாங்கள் இன்னும் நல்லபடியாகத் தொழில் செய்து சம்பாதிப்போம்.

எங்களிடம் ஒருமுறை பொருட்களை வாங்கியவர்கள் அதன் தரம் மற்றும் சுவையை உணர்ந்து மீண்டும் மீண்டும் வந்து வாங்கிச் செல்கின்றனர்’’ என்று முடித்தார் ஆறுமுகம்.

 

Leave a Reply