ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் சாரதா ஸ்ரீநாத்

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் சாரதா ஸ்ரீநாத்

ஜெயலலிதா கேரக்டரில் ஏற்கனவே த்ரிஷா மற்றும் நயன்தாரா நடிக்க ஆசைப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சாரதா ஸ்ரீநாத் என்ற நடிகையும் விருப்பப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

என் தந்தை ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் சட்டம் படித்து இருக்கிறேன். கல்லூரியில் படித்தபோதே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அது கவர்ச்சியான உலகம் என்று பெற்றோர் பயந்தனர். பின்னர் அவர்களை சம்மதிக்க வைத்து நடிக்க ஆரம்பித்தேன்.

நான் மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள். அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். அவர் படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

விக்ரம் வேதா படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். தலைக்கனம் கிடையாது. சுய கட்டுப்பாடு, சுய கவுரவத்துடன் எல்லோரும் இருக்க வேண்டும். தமிழக ரசிகர்கள் என்னை தமிழ் பெண் மாதிரி பார்க்கிறார்கள்.

தமிழ் திரையுலகம் நன்றாக முன்னேறி இருக்கிறது. இங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைத்து மொழி பட உலகிலும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். என்னை எவ்வளவு காலம் ரசிகர்கள் திரையில் பார்க்க விரும்புகிறார்களோ அதுவரை நடித்துக்கொண்டு இருப்பேன்.

எனது லட்சிய கதாபாத்திரம் என்பது ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது. யாராவது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்து முதல்-அமைச்சராகி உயர்ந்த இடத்துக்கு சென்றவர் அவர். அவரது வாழ்க்கையும், சாதனைகளும் எனக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு சாரதா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்

Leave a Reply