பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி. முதலீட்டாளர்கள் கவலை
கடந்த இரண்டு வருடங்களாக இல்லாத அளவில் நேற்றைய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. சீனாவின் பொருளாதார தடுமாற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்றைய காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் 1,006.54 புள்ளிகள் சரிந்து 26,359.53 புள்ளிகளுக்கு சென்றது. 2015ஆம் ஆண்டில் முதல்முறையாக இப்போதுதான் பங்குச்சந்தையானது இந்தக் கடும் சரிவைக் கண்டு உள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டியிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு 8000 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாகச் சென்றது.
பங்குச்சந்தையின் இந்த சரிவானது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நேற்று ஒரே நாளில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பெரும் சரிவை கண்டு உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான சரிவை கண்டு உள்ளது.
சீனா தனது ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் யுவான் கரன்சி மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவையனைத்தும் பங்கு வர்த்தகத்தை பதம் பார்த்து வருகிறது. பங்குச்சந்தையின் சரிவு காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 66.47-ஆக குறைந்தது