பாதுகாப்பான பங்கு வர்த்தக முதலீடு. 10 சிறந்த வழிகள்.

 

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. பலரால் பணம் ஈட்ட முடியவில்லை என்பதற்கு முக்கியக் காரணங்களாகப் பொறுமையின்மை, முதலீட்டில் ஒழுங்கின்மை, முறையாகப் பங்குச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது போன்றவையாக இருக்கின்றன.

சந்தையைப் புரிந்துகொண்டு முதலீட்டைப் பாதுகாத்து, அதனை வளர்ப்பதற்கான 10 வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

 1 கடன் வாங்கி, பங்குகளில் முதலீடுச் செய்யாதீர்கள்!

நீங்கள் சரியான பங்கைத் தேர்வுச் செய்திருக்கலாம். கம்பெனியும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக் கும். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில் திடீர் அரசியல் நிகழ்வு போன்ற காரணங்களினால் பங்கின் விலை வேகமாக இறங்கக் கூடும். இந்தநிலைப் பல ஆண்டுகளுக்குக்கூட நீடிக்கலாம்.

 

அப்போது கடன் வாங்கி முதலீடு செய்திருந்தால், வட்டி நஷ்டம் ஏற்படும். இன்னொருபக்கம் பங்கின் விலை இறக்கத்தால் முதலீட்டு இழப்பு ஏற்படும். இந்த இரண்டு இழப்பையும் ஒருவரால் தாங்கிக்கொள்வது என்பது கஷ்டமான காரியம். எனவே, கடன் வாங்கி முதலீடுச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

 2 முதலீட்டைப் பிரித்துச் செய்யுங்கள்..!

உங்களின் முதலீடு அனைத்தையும் ரியல் எஸ்டேட், பங்கு அல்லது தங்கம் ஏதாவது ஒரு சொத்தில் மொத்தமாக ஒருபோதும் முதலீடுச் செய்யாதீர்கள்.

சில சமயங்களில் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற சொத்துகள் ஒரே வருடத்தில் 50 சத விகிதத்துக்கும் கீழ் இறங்கிய வரலாறு உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஒரே சொத்தில் முதலீடு செய்திருந்தால், நம்முடைய அசல் முழுவதையும் இழக்க நேரிடும்.

உங்கள் மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 30% மட்டும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள். 40 – 50 சதவிகிதத்தைப் பாதுகாப்பான வைப்பு நிதி மற்றும் நிரந்தர வருமானம் தரக்கூடிய பாண்டுகள், வரிச் சேமிப்பு பாண்டுகளிலும் முதலீடு செய்யுங்கள்.

மீதமுள்ள 20 – 30 சதவிகிதத்தைத் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டிலும் பிரித்து முதலீடு செய்யுங்கள்.

இப்படிப் பிரித்துச் செய்வதன்மூலம் அளவுக்கதிமான நஷ்டத்தைச் சுலபமாகத் தவிர்க்க முடியும்.

 3  பங்குகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள்.!

ஒரேயரு பங்கில், ஒரேயரு துறையில் மட்டும் முதலீடு செய்யாமல் பல பங்குகளில், பல துறைகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள்.

உதாரணமாக, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளே இரண்டு நாட்களில் 30% சரிந்துவிடுகிறது. வங்கித் துறைகளில் அரசின் கொள்கைகளால் சில சமயங்களில் வங்கிப் பங்குகள் தங்களுடைய பெரும்பான்மையான மதிப்பையும் இழந்துவிடுகின்றன.

மொத்தப் பங்கு முதலீட்டில் சுமார் 10% ஒரு தனிப்பட்ட பங்கில் முதலீடு செய்யுங்கள். 15 முதல் 20% வரையிலான முதலீட்டை ஒரு குறிப்பிட்ட துறை பங்குகளில் செய்வது அவசியம்!

 4  மேலாண்மை தரத்தை ஆராய்க!

பங்குகளில் முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனத்தின் மேலாண்மையின் தரத்தை ஆராய்ந்துப் பார்த்து அதன்பின் பங்கை வாங்கவும். உதாரணமாக, சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 – 15 ஆண்டுகளில் நிர்வாக மேலாண்மையால் முதலீட்டாளர்களுக்கு நிறையச் சொத்துச் சேர்த்துத் தந்திருக்கிறது.

பங்கில் முதலீடு செய்யும் நிறுவனம் பற்றி மோசடி, ஏமாற்றுப் புகார்கள், செபி அமைப்பின் எச்சரிக்கைகள், முதலீட்டாளர்களின் புகார்கள் ஏதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடிப் பாருங்கள். கம்பெனி பெயரை மாற்றும் நிறுவனங்கள் மற்றும் வளர்ச்சித் துறையின் பெயரை நிறுவனத்தோடு தேவையில்லாமல் இணைத்துக்கொள்ளும் நிறுவனங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செபி அமைப்பால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்கு மூலதனம் 50% முதல் 75% வரை இருப்பது போன்ற பங்குகள் பாதுகாப்பானவை.

5  நிறுவனத்தின் கடனை கவனியுங்கள்!

நீண்டகால முதலீட்டாளர்கள் எதைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, நிறுவனத்தின் கடனை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கடனுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதத்தையும், கடனுக்கும் பங்கு மூலதனத்துக்கும் உள்ள விகிதத்தையும் கவனிப்பது முக்கியம். இந்த விகிதங்கள் மிகவும் குறைவாக இருப்பது நல்லது.

ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், நிறுவனம் கட்டும் வட்டியைவிட மூன்று மடங்குக்கு இருப்பது நல்லது. செயல்பாட்டு லாபத்தின் அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாக வட்டியையோ கட்டும் நிறுவனப் பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்து, வரிக்குப் பிந்தைய லாபமான நிகர லாபத்தையும் கவனியுங்கள். அதுதான் ஒரு நிறுவனத்தின் உண்மையான லாபத்தைப் பிரதிபலிக்கும்.

6  நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்தை மதிப்பிடுங்கள்!

ஒரு நிறுவனம், அதன் நடைமுறை மூலதன (ஷ்ஷீக்ஷீளீவீஸீரீ நீணீஜீவீtணீறீ) செலவு களைச் செய்யத் திண்டாடுகிறது எனில், கூடிய விரைவில் அது சீர்குலைந்துப்போக வாய்ப்புள்ளது.

நிறுவனங்களுக்கு வரவேண்டிய விற்பனைப் பணம் மற்றும் அதன் மூலப்பொருட்கள், உற்பத்திப் பொருட் களின் கையிருப்பைக் கவனமாக ஆய்வு செய்யவேண்டும்.

இந்த இரண்டும் விற்பனையில் 50 சதவிகிதத்துக்குமேல் இருந்தால், முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது அவசியம். இவையெல்லாம் நிறுவனத் துக்கு வரப்போகிற பின்னடைவை முன்கூட்டியே சுட்டிக்காட்டும் அம்சங்களாக இருக்கின்றன.

7  செய்திகளுக்கு முக்கியத்துவம்!

நிறுவனம் பற்றிய மோசமான செய்திகள், வதந்திகள் போன்றவற்றால் குறுகிய காலத்தில் பங்கின் விலையில் இறக்கம்

ஏற்படுகிறது. கடந்த வருடம் ஒரு எனர்ஜி கம்பெனி தனது கடன்களைச் சீரமைக்க ஒப்புதல் அளித்துள்ளது எனச் சொன்னபோது அந்தப் பங்கு 30% வரை வேகமாக ஏறியது.  உடனே வந்த அதனுடைய காலாண்டு நிதிநிலை அறிக்கை மிகவும் மோசமாக இருந்ததால், 50% சரிவைச் சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்கள், இந்தச் செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

 8  நிறுவனர்களின் பங்குகள் அதிகமாக அடமானம் வைக்கப்பட்டிருப்பது!

பொருளாதார மந்தநிலையில் பல நிறுவனங்களின் நிறுவனர்கள், அவர்களின் பங்குகளை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் அதிகமாக 90 சதவிகிதம்கூட அடமானம் வைத்திருக் கிறார்கள். இப்படி 30 சதவிகிதத்துக்கு மேல், நிறுவனர்கள் பங்குகளை அடமானம் வைத்திருந்தால், அந்த நிறுவனப் பங்கு முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில பங்குகளில் 90 சதவிகிதப் பங்குகளை அடமானம் வைத்துப் பணம் பெற்று அதைத் தங்களுடைய சொந்தச் செலவுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சந்தைச் சரியும்போது கடன் கொடுத்தவர்கள் அதைத் திரும்பப் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை விற்க ஆரம்பிக்கும்போது, அந்தப் பங்கின் விலை 50 சதவிகிதத்துக்குமேல் சரியும்.

அதுபோன்ற சரிவில் பங்குகள் லோயர் சர்க்யூட்டில் சிக்கிவிடுவதால், சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்று நஷ்டத்தைக்கூட குறைத்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

9 பங்கின் விலை VS ஃபண்டமென்டல்!

பங்கின் விலை ஏற்றமானது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான விஷயம். சில நிறுவனங்களின் ஃபண்டமென்டல் வலிமையானதாக இருக்கும் அல்லது ஃபண்டமென்டல் வலிமையாக மாறிவரும். ஆனால், இது பங்கின் விலையில் எதிரொலிக்காது. அதாவது, பங்கின் விலை அதிகரிக்காது.

இதுபோன்ற நிலையில் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் சிறிய நஷ்டம் என்கிற நிலையில் அந்தப் பங்குகளிலிருந்து வெளியேறிவிடுவார்கள். இதுபோன்று உடனடியாக எந்த  முடிவும் எடுக்கக்கூடாது. உதாரணத்துக்கு, ஜெ.பி. கெமிக்கல், சீயட் போன்ற கம்பெனிகள் வலிமையாக இருந்தும் அதன் பங்கின் விலை குறிபிடத்தக்க அளவுக்குக் குறைந்தன. ஆனால், மறுபடியும் ஜே.பி. கெமிக்கல் 100%, சியட் டயர் 200% விலை ஏறியது. பொறுமை இல்லாதவர்கள் விலை குறைந்தபோது பங்குகளை விற்று நஷ்டத்தைத்தான் சந்தித்தனர்.

10 சீரான செயல்பாடு!

நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிகர லாபம் கடந்த 3 அல்லது 5 ஆண்டுகளில் சீராக வளர்ச்சிக் கண்டுவரும் நிறுவனப் பங்கு களில் முதலீடு லாபகரமாக இருக்கும். பொருளாதார மந்தநிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடுச் செய்யலாம். தொடர்ந்து 15 – 20% டிவிடெண்ட் பேஅவுட் வழங்கிவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

 

மேலே கூறப்பட்டிருக்கும் குணநலன்களைக்கொண்ட பங்குகளை, அவற்றின் விலையில் கரெக்ஷன் ஏற்பட்டிருக்கும் சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்த்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

Leave a Reply