கேரளாவைக் கலக்கும் ‘ஷீ’ டாக்சி!
தமிழகத்தில் அம்மா வாட்டர், அம்மா உணவகம் என அனைத்தும் ‘அம்மா’ மயமாகிப் போயிருக்கிறது. ஆனால், பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்களுக்கான கால் டாக்சியை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது, அந்த மாநில அரசு.
கேரள தலைநகரான திருவனந்தபுரம் செல்பவர்கள், அங்கு பிங்க் கலரில் டாக்சிகள் வலம் வருவதை பார்த்திருக்க முடியும். இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே, அந்த மாநிலத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்காக, சமூக நீதிக்கான அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு தொடங்கப்பட்ட ‘ஷீ டாக்சி’ மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த திட்டம் பற்றி சமூக நீதிக்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘ஜெண்டர் பார்க்’ அமைப்பின் திட்ட அலுவலரான லிஜின் நம்மிடம் பேசுகையில், ‘‘பெண்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கு. வெளியூர்களுக்கு சென்று நள்ளிரவில் திரும்பும் ஆண்கள், தைரியமாக கால் டாக்சியில் சென்றுவிடலாம். அதுவே ஒரு பெண்ணாக இருந்தால் அப்படி செல்ல முடிவதில்லை. இதனால் இரவு முழுவதும் விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ காத்துக் கிடக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இரவு நேரங்களில், முன்பின் அறிமுக இல்லாத டிரைவர்களை நம்பி பயணம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுவதால் இதுபோன்ற நிலைமை உள்ளது. அதையும் மீறி அவசரமாக செல்ல வேண்டிய நிலைமை வந்தால், தனியாகச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையிலும் பயத்துடனே கால் டாக்சிகளில் செல்கிறார்கள். இனி அது போன்ற கவலை அவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காகவே ‘ஷீ டாக்சி’ யை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இந்த டாக்சியில் டிரைவராக பெண்களே இருக்கிறார்கள். இந்த டாக்சியில் குடும்பத்தினருடன் வரக்கூடிய ஆண்களை தவிர, தனியாகவோ நண்பர்களுடனோ வரக்கூடிய ஆண்களை ஏற்றுவதில்லை. ஆரம்பத்தில் இந்த வேலைக்கு வருவதற்கு பெண்கள் அஞ்சினார்கள். அதனால் ஐந்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தோம். பிறகு அவர்களுக்கு கடனுக்கு கார்களை வாங்கிக் கொடுத்தோம்.
இந்த கார்கள் அனைத்தும், எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கால் சென்டருடன் எப்போதும் தொடர்பில் இருக்கும். காருக்கான ஆஃபர் வந்ததும், நாங்கள் அருகில் இருக்கும் காரை அந்த இடத்துக்கு உடனே போகச் சொல்வோம். இந்த காரில் வாக்கி டாக்கி மட்டும் அல்லாமல், ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் செய்து இருப்பதால் கார் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை எங்களால் கண்டு கொள்ள முடியும்.
காரில் செல்லும் பயணிகளுக்கு சில்லறை தட்டுப்பாடு போன்ற பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக டெஃபிட் கார்டு, கிரடிட் கார்டுகளை பயன்படுத்தும் வசதியும் உண்டு. இது தவிர, இந்த கார்கள் அனைத்திலும் அவசர காலத்தில் பயன்படுத்தும் அலாரத்தை இணைத்து உள்ளோம். அத்துடன், காரானது நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. டிரைவர் மற்றும் பயனாளிகள் ஆகியோரில் யாருக்காவது ஆபத்து என்றால், அலாரம் அடித்து அலார்ட் செய்யும் வசதிக்காக காரின் முன்பகுதியிலும், பயணிகள் அமரும் இடத்திலும் அலாரத்துக்கான சுவிட்ச் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டாக்சியின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் இப்போது 50 கார்களாக உயர்ந்து விட்டது. இன்னமும் நிறைய பேர் ‘ஷீ டாக்சி’ வாங்க ஆர்வமாக இருக்காங்க. அந்த அளவுக்கு இந்த டாக்சிக்கு வரவேற்பு ஏற்பட்டு இருப்பதால், சீக்கிரமே பிற நகரங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறோம். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற்றும் பெண்கள், வெளிநாடுகளில் இருந்து ஏர்போர்ட்டில் வந்து நள்ளிரவில் இறங்கும் பெண்கள் ஆகியோர் இப்போது எந்த சிரமமும் இல்லாமல் நிம்மதியாக வீடுகளுக்கு போகிறார்கள்” என்று உற்சாகமாக பேசினார்.
எதை எதையெல்லாமோ பக்கத்து மாநிலங்களைப் பார்த்து காப்பி அடிக்கும் நம்ம அரசியல்வாதிகள், இது மாதிரியான நல்ல திட்டங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏனோ?
Thanks to vikatan.com