மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து இதுவரை ஐந்து மாநில கவர்னர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்களில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்க மாநில கவர்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் ஷீலா திக்ஷித் உள்பட இன்னும் சில கவர்னர்களை மத்திய அரசு பதவி விலகும்படி வலியுறுத்தி வரும் நிலையில் கேரள ஆளுனர் ஷீலா தீக்ஷத் திடீரென பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கேரள ஆளுனராக இருக்கும் ஷீலா தீக்ஷத் பதவிநீக்கம் அல்லது ஏதேனும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநராக இடமாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் தனது பதவியை காப்பாற்றுவதற்காகவே பிரதமரை சந்தித்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டாலும், செய்தியாளர்களிடையே இந்த கருத்தை அவர் மறுத்துள்ளார்.
ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகும் படி மத்திய அரசு, இதுவரை தனக்கு எவ்வித நிர்பந்தமும் கொடுக்கவில்லை என்றும் இருப்பினும் வருங்காலத்தில் மத்திய அரசின் முடிவு எப்படியிருக்கும் என்று தன்னால் உறுதியாக எதுவும் கூறமுடியாது என்றும்ஷீலா தீக்ஷத் கூறினார்.