சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், நெம்மேலிக்கு அருகே உள்ளது கிருஷ்ணன் கரணை எனும் சிறிய கிராமம். அங்கே… ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளுக்கு அருகில், அமைதியே உருவெனக் கொண்டு திகழ்கிறது ஷீர்டி ஸ்ரீசாயிநாதர் ஆலயம்.
வாயிற்கதவு துவங்கி, சந்நிதானம் வரை இரண்டு பக்கமும் அடர்ந்திருக்கின்றன மரங் களின் குளுமையும் வாசமும்! அதையடுத்து மிகப் பெரிய கூடம். அதன் மேற்கு மாடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில், வெண்பளிங்கு மேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீசாயிநாதர். அருள் தவழும் கண்கள், அன்பே உருவெனக் கொண்ட முகம், அரவணைக்கிற புன்னகை என சாந்நித்தியத்துடன் காட்சி தரும் ஸ்ரீசாயி நாதரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஸ்ரீஷீர்டி சாயி டிரஸ்ட் நிறுவனரும் சாயி பக்தருமான கே.வி.ரமணி என்பவர் ஆலயத்தை உருவாக்கி, நிர்வகித்து வருகிறார்.
”நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை மயிலாப்பூர்லதான்! அப்பா வக்கீல். விவேகானந்தா கல்லூரியில்தான் படித்தேன். அதன்பிறகு ஐ.பி.எம்-மில் சாஃப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். என் சிறுவயதில் இருந்தே, மயிலாப்பூர் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும், லஸ் கார்னர் பிள்ளையாரும்தான் இஷ்ட தெய்வங்கள்.
1977-ம் வருடம்… அப்போது எனக்கு 27 வயது இருக்கும். நெருங்கிய உறவினர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரமாகியும் எந்த மருத்துவர்களாலும் அவருக்கு என்ன பிரச்னை என்றே அறியமுடியவில்லை. அந்தத் தருணத்தில்… ஏனோ தெரியவில்லை, எனக்கு பாபாவைப் பற்றிய நினைப்பு வந்தது. ‘பாபா… என் உறவினர் குணமாகணும். அவர் குணமாகிட்டா, ஒவ்வொரு வியாழக்கிழமையும் உன் கோயிலுக்கு வரேன்’ என்று வேண்டிக் கொண்டேன். பிரார்த்தனை முடிந்ததும் எனக்கே ஆச்சரியம்… ‘ஏன் திடீரென்று பாபாவை நினைத்து அவரிடம் வேண்டுதலை வைத்தோம்’ என்று!
அதையடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, என் உறவினருக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகத் தகவல் வந்தது. அவரை வீட்டுக்கு அழைச்துக்கொண்டு போகலாம் என்று தெரிவித்துவிட்டார்களாம். பாபாவிடம் நான் அடைக்கலமானது அந்தத் தருணத்தில் இருந்து தான்!” என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் ரமணி.
அவரே தொடர்ந்தார்… ”காஞ்சி மகா பெரிய வாளைத் தரிசிப்பேன். ஒரு நிம்மதியும் அமைதியும் அங்கே கிடைக்கும். அதேபோல், பாபாவின் சந்நிதியில் நின்றாலே, எனக்குள் இருந்த சின்னச் சின்ன கஷ்டங்கள்கூட, காணாமல் போகும். நான் மெள்ள மெள்ள பாபாவின் பக்தனானது இப்படித்தான்! இந்த என் வாழ்க்கை அவர் கொடுத்தது. எனக்கு நடந்த நல்லது கெட்டது அனைத்துமே பாபா கொடுத்த பிச்சை என்றே நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் ரமணி, ஷீர்டியில் சாயி ஆஷ்ரம் பக்த நிவாஸ் கட்டியிருக்கிறார்.
”அதைக் கட்டி முடிப்பதற்குள் பகவான் எனக்கு வைத்த சோதனைகள் எத்தனை எத்தனையோ! 1536 அறைகளும் 192 டார்மெட்ரிகளும் வைத்து, மிக வசதியோடு குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகள் கட்டத் திட்டமிட்டு, வேலைகள் நடந்தன. ஷீர்டியில் உள்ள சில நபர்கள், தங்களது தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுமோ என பயந்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
எனக்கு பாபா மீதுதான் கோபம் வந்தது. கிட்டத்தட்ட அஞ்சரை வருட உழைப்பு இது. அனைத்தும் வீணாகிவிடுமோ என்று கதறினேன். ‘கொஞ்சம் கருணை காட்டேன் பாபா’ என்று அழுது முறையிட்டேன். ஆச்சரியம்… இந்த வழக்கையே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துவிட்டது கோர்ட். அதையடுத்து, கட்டட வேலை முடிந்ததும், ஷீர்டி கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீசாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட்டிடமே அந்த விடுதியை ஒப்படைத்துவிட்டேன். இப்போது எண்ணற்ற பக்தர்கள், அந்த விடுதியில் தங்கிச் செல்வதைப் பார்க்கும்போது, நான் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!” என்று சொல்லும்போதே குரல் தழுதழுக்கிறது அவருக்கு.
”சாயி சத்சரிதம் நூலில் குறிப்பிட்ட சில வரிகள்தான், சத்சரிதத்தின் சாராம்சமே! அதாவது, ‘என்னிடம் பொருள் வேண்டி வருபவர்களுக்கு, அதை வாரி வாரி வழங்குகிறேன். ஆனால், அருள் வேண்டி வருபவர்களுக்கு மீளமுடியாத துயர்களையும் தாள முடியாத கஷ்டங்களையும் வேண்டுமென்றே கொடுக்கிறேன். அவற்றைத் தாண்டி வருபவர்கள் என்னை நோக்கி ஓர் அடி எடுத்துவைக்கலாம். மீண்டும் இடர்களைத் தாண்டி வரும்போது, இன்னோர் அடி எடுத்து வைக்கலாம். என் பக்தர்கள் என்ன விரும்பினாலும் விரும்பியதைக் கொடுக்கிறேன். அப்படியாகிலும் அவர்கள், நான் கொடுப்பதை விரும்ப ஆரம்பிப்பார்கள். அதன் பிறகே, நான் தர வேண்டியதைத் தருவேன்!’ என்கிற வரிகளை நினைத்துக்கொண்டால், வாழ்க்கையில் எந்தத் துயர் வந்தாலும் பாபா பார்த்துக்கொள்வார் என உறுதியாக இருந்துவிடலாம்” என்று சொல்லும் ரமணி, வசதியற்ற குழந்தைகள் படிப்பதற்கு, அறுவைசிகிச்சை முதலான மருத்துவச் செலவுகளுக்கு, அன்னதானப் பணிகளுக்கு என டிரஸ்ட் மூலம் உதவிகள் செய்து வருகிறார்.
”இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் சோலன் முதல் கன்யாகுமரி வரையில், எங்கே பாபா கோயில் கட்டினாலும், பாபாவின் மூலவர் திருவுருவச் சிலை முதல் மற்ற பொருட்கள் எல்லாம் இங்கிருந்து ‘ஸ்ரீதன’மாக அனுப்புகிறோம். அது தவிர, 3000 குழந்தைகளுக்குப் படிப்பு, 3000 பேருக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறோம்” என்கிறார் ரமணி
”இந்தக் கோயில் கட்டியதன் பின்னணியைச் சொல்லுங்களேன்?”
”இந்த இடம் வாங்கி பல வருடங்களாகிவிட்டன. பத்துக்குப் பத்து அளவில், தியானம் செய்ய ஒரு ஹால் கட்டுவதுதான் என் எண்ணமாக இருந்தது. ஆனால், பாபா இந்த இடத்தில் கோயில் வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். ஆமாம், இது அவரே கட்டிக்கொண்ட கோயில். 2002 ஆகஸ்ட் மாதம் கட்டட வேலையைத் துவக்கி, 2003 ஏப்ரலில் முடித்தோம். ஏப்ரல் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இங்கே துனி அமைக்க, ஷீர்டியில் அனுமதி வாங்கினோம். துனியில் இருந்தே தணல் பெற்று, அதை மண்சட்டியில் வைத்து, பத்திரமாகக் கொண்டு வந்தோம்.
கோயில் கட்டும் வேளையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று… எங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் மேனேஜர், அலுவலக விஷயமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ஒருநாள் இரவு அவர் கனவில் தோன்றிய பாபா, ‘அங்கே கோயில்ல தண்ணி ஒழுகுது. இங்கே என்ன பண்றே நீ?’ என்று கேட்டாராம். இதைக் கேட்டு அலறியடித்துக்கொண்டு எழுந்த மேனேஜர், உடனே எனக்கு போன் செய்தார். கோயிலுக்குச் சென்று பார்த்தேன். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவர் சொன்ன இடத்தில், சென்ட்ரிங் சரியில்லாமல் தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. இதுபோல் எத்தனையோ அதிசயங்கள்… ஆச்சரியங்கள்… எல்லாம் பாபாவின் பேரருள்!” என்று நெக்குருகிச் சொல்கிறார் ரமணி.
கோயிலை வலம் வந்தோம். விநாயகர் சந்நிதி முகப்பிலேயே உள்ளது. கிழக்குப்புறத்தில் மகாமேருவும் ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளது. குர்ஆனும் பைபிளும் தினமும் ஓதப்படுகின்றன.
”எனக்கு 8 விதமான பூஜைகளோ, 16 விதமான உபசாரங்களோ தேவையில்லை. எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கு நான் வருகிறேன். எங்கெல்லாம் சத்சரிதம் படிக்கப்படுகிறதோ, நாமஜபம், அன்னதானம் நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் வருகிறேன்” என்று சத்சரிதத்தில் சொல்லியிருக்கிறார் சாயிபாபா. ‘என் எதிரே அமர்ந்து சும்மா இரு. நம்பிக்கை, பொறுமையோடு இரு. நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்கிறார். ஒருமுறை, இங்கு வந்து சாயிநாதனைத் தரிசியுங்கள். நீங்களும் உணர்வீர்கள்!” என்று சிலிர்த்தபடி சொல்கிறார் ரமணி.
படம்: பா.ஓவியா
எங்கே இருக்கிறது?
கிருஷ்ணன்கரணை ஷீர்டி சாயி ஆலயத்துக்குச் செல்ல, அடையாரில் இருந்து 588 எண் பேருந்தும், தி.நகரில் இருந்து 599 எண் பேருந்தும் உள்ளன. முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.