5 குழந்தைகள் பெற்ற இந்துக்களுக்கு ரூ.2 லட்சம். சிவசேனா அறிவிப்பால் பரபரப்பு
இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால் வரும் 2021ஆம் ஆண்டு இந்தியா சீனாவை தாண்டிவிடும் என்று கூறப்படும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஐந்து குழந்தைகள் பெரும் இந்து குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி என சிவசேனா கட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் வெளியானது. அந்த பட்டியலில் இந்துக்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்துக்களின் வளர்ச்சி சதவீதம் முந்தைய கணக்கெடுப்பை காட்டிலும் குறைந்திருப்பதாகவும் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தது குறித்து கவலை தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, ஐந்து குழந்தைகளை பெற்ற இந்துக் குடும்பங்களுக்கு பரிசு திட்டம் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்படி , கடந்த 2010 முதல் 2015 வரை ஐந்து குழந்தைகளை பெற்ற தம்பதியருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வீணு லாவண்யா கூறியுள்ளார்.
மேலும், இதற்கான விண்ணப்பத்துடன் 2010 முதல் 2015க்குள் ஐந்துகள் குழந்தைகள் பிறந்ததற்கான நகராட்சி சான்றிதழையும் இணைத்து வழங்குபவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்