இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்துவது கண்டனத்துக்குரியது. சிவசேனா

இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்துவது கண்டனத்துக்குரியது. சிவசேனா
sivasena
சமீபத்தில் எடுக்கப்பட்ட மதவாரியான, ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களின் ஜனத்தொகை சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இந்துக்களின் ஜனத்தொகை சதவிகிதம் குறைந்திருப்பதாகவும் தெரிய வந்தது. இதனால் இந்து அமைப்பை சேர்ந்த ஒருசிலர், இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி கூறிவருகின்றனர். இதற்கு சிவசேனா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது:

சில ஆன்மிகத் தலைவர்களும், பாஜக எம்.பி.க்களும், ‘முஸ்லிம்களுக்கு கடும் போட்டி அளிப்பதற்காக இந்துக்கள் நான்கு திருமணங்கள் செய்து கொண்டு, அதிக அளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என கருத்து கூறி வருகின்றனர்.

மக்கள்தொகையை அதிகரிப்பதால் மட்டுமே வலிமை அதிகரித்து விடாது. குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கடுமையாகச் செயல்படுத்த அரசை ஆர்எஸ்எஸ் இணங்கச் செய்ய வேண்டும்.

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, நாசிக்கில் நடைபெற்ற கும்பமேளாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “குழந்தைகள் இல்லாத இந்து குடும்பத்தினருக்காக ஹெல்ப்லைன் தொடங்கி, அவர்களை 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்போம்” எனப் பேசியுள்ளார்.

மக்கள் தொகை வெடிப்பு என்ற பிரச்சினையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. நமது துன்பங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் என்பதும் ஒரு காரணம். மக்கள் தொகை அதிகரிப்பதால் வேலைவாய்ப்பின்மையும், ஏழ்மையும் அதிகரிக்கிறது.

ஒருபுறம் அளவான குடும்பம் வளமான வாழ்வு என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பிரச்சாரம் செய்யப்படும் நிலையில், மறுபுறம் 4-5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆதரவான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. குழந்தை இல்லாமல் இருப்பது ஒன்றும் சாபம் அல்ல. பெற்றோராக இருப்பதன் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கு 4 குழந்தைகள் தேவையில்லை. ஒரு குழந்தையே போதும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவின் இந்த தெளிவான தலையங்கத்திற்கு ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply