செருப்பால் அடித்த சிவசேனா எம்பியை பழிவாங்கிய ஏர் இந்தியா
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்றில் பயணம் செய்த சிவசேனா கட்சி எம்.பி ரவீந்திர கெயிக்வாட், தனக்கு பிசினஸ் வகுப்பு இருக்கை அளிக்கவில்லை என்று கூறி ஏர் இந்தியா ஊழியர் ஒருவரை 25 முறை செருப்பால் அடித்தார். இதனை அவர் பெருமையாக ஊடகங்களில் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் விமான சேவை நிறுவனங்கள், இனி ரவீந்திர கெயிக்வாட்டை தங்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்தன. ஆனால் இது குறித்து கவலைப்படாத சிவசேனா எம்.பி, மீண்டும் அதே ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வேன் என திமிராக கூறியதோடு மட்டுமின்றி இன்று தனது உதவியாளர் மூலம், மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எம்.பி ரவீந்திர கெயிக்வாட் டிக்கெட் புக் செய்தார். ஆனால் அந்த டிக்கெட்டை ஏர் இந்தியா நிறுவனம் அதிரடியாக ரத்து செய்தது.
அதன் பின்னர் ஐதராபாத்திலிருந்து டெல்லி செல்லும் விமானத்திலும் ரவீந்தர கெயிக்வாட் டிக்கெட் புக் செய்தார். பின்னர் அந்த டிக்கெட்டையும் ஏர் இந்தியா நிறுவனம் கேன்சல் செய்தது.
இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் டிக்கெட் முன் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ரவீந்திர கெயிக்வாட் மறுத்துள்ளார்.