பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினர்களுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் சிவசேனா கட்சி, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால், முஸ்லீகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் அவசியத்தை உணர்த்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும்’ என்று சிவசேனைக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் “சாம்னா’ என்ற நாளேட்டில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2001 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நிகழாண்டில் இது மேலும் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் மொழி மற்றும் உணர்வுகளின் சமநிலை தவறிவிடும். புவியியல் சார்ந்த மக்கள்தொகை விகிதாச்சார சமநிலையும் பாதிக்கப்படும். இதனால் நாட்டின் ஒற்றுமை பாதிப்படையக் கூடும்.
எனவே, குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து முஸ்லிம்களை உணரச் செய்வதோடு, இம்மண்ணின் (நாட்டின்) சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும். “முஸ்லிம்கள் தங்கள் பிரச்னைகளுக்காக நள்ளிரவில் கதவைத் தட்டினாலும் உதவத் தயார்’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். அதேபோன்ற உதவியை இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் செய்வார்களா? ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தைவிட, பொது சிவில் சட்டம் கொண்டுவருவதுதான் நாட்டின் தற்போதைய தேவையாகும் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.