பின்லேடனை சுட்டு கொன்றது நான் தான்: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்கொய்தா இயக்கத்தின் பின்லேடன். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருந்த பகுதிக்கு சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.
பின்லேடனை கொல்ல சென்ற கமாண்டோ படையில் யார்-யார் இருந்தார்கள், அவர்கள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் என்பவர் இதுகுறித்து புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த புத்தகத்தில் ராபர்ட் ஓ நீல் கூறியிருப்பதாவது ; பின்லேடன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நின்று கொண்டிருந்தார். உடனே எனது துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டேன். 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததும் கீழே சாய்ந்தார். மறுபடியும் நான் சுட்டேன். மற்ற வீரர்களும் உடனடியாக சுட்டார்கள். நான் 3 முறை சுட்டதில் தான் அவர் உயிரிழந்தார்.