ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை:

12187822_936833753054470_8216082835575427993_n

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறது இப்பாட்டு. “ஊடல்கூடல்” என்றது-ஊடலென்ன கூடலென்ன என்று இரண்டாகச் சொல்வதல்ல’ ஊடலோடு கூடுகை யென்றாய் ஊடுகையை மாத்திரம் சொல்லிற்றாகக்கொள்க. ஊடலாவது ப்ரணய கலஹம்’ ஊடல்கூடலாவது அதை உடைத்தாயிருக்கை’ ப்ரணயரோஷவிசிஷ்டத்வம். “போதுமறித்துப் புறமே வந்து நின்றீர், ஏதுக்கிதுவென இதுவென்இது வென்னா?” என்றும் “என்னுக்கு அவளை விட்டிங்குவந்தாய் இன்ன மங்கே நட நம்பி! நீயே” என்றும், “உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென், என்னுடைய பந்துங்கழலும் தந்து போகு நம்பீ!” என்றும் இப்புடைகளிலே சொல்லி எம்பெருமானைக் கிட்டவர வொட்டாமல் கதவடைத்துத் தள்ளுகை ஊடல் எனப்படும்.
உணர்தல் ஸ்ரீ “உணர்த்தல்” என்று பிறவினையாயிருக்க வேண்டுவது ஓசையின்பம்நோக்கி ‘உணர்தல்’ என்று பிரயோகிக்கப் பட்டிருக்கிறதென்று ஒருபெருங்கல்வியாளர் சொல்லுவர். ஸம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியை எம்பெருமானுக்கு நோpலும் தூரிதுமூலமாகவும் தெரிவித்தல். உணர்தல் என்றதற்கு இங்கு இதுவே பொருள் என்பர். இனி, புணர்தலாவது இவர்களுடைய துடிப்பை எம்பெருமான் நன்கு அறிந்து “உங்களை விட்டால் எனக்கு வேறு புகலுண்டா? என்னை வேறாநினைக்கலாமா? அடியேனல்லேனோ? தாஸனல் லேனோ?” என்றாற்போலே ஆற்றாமை மீதூரிர்ந்தமை தோற்றப் பலபாசுரங்களைச் சொல்லிக்கொண்டு சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய் நெருங்கினவாறே இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பாரிமாறுகை. ஆக, ப்ரண்ய ரோஷந் தோற்றப் பேசுகையென்ன, தங்கள் வருத்தம் அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்துவதென்ன, பின்பு இஷ்டப்படி ஸம்ச்லேஷிக்கையென்ன ஆகிய இப்படிப்பட்ட காரியங்களே யாத்திரையாயிருப்பவர்கள் ஆய்ச்சிகள் என்றவாறு.
இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “உணர்தல் புணர்தலே” என்றவிடத்திற்கு “இவன்றன் குறைகளை அவர்கள் உணர்த்தும்படியும் அவன் பின்பு ‘க்ஷாமணம் பண்ணிப் புணரும்” என்ற வாக்கியம் அச்சுப்பிரதிகள் எல்லாவற்றிலுங் காணப்படுகிறது. இது அநந்வித வாக்யம்’ (அச்சுப்பிழை.) தாளகோசங்களில் சுத்தப்பாடம் காணத்தக்கது. திருவாய்மொழியில் “உணர்த்தலூட லுணர்ந்து” என்ற பாட்டின் ஈட்டிலே’ போக ப்ரகாரந்தன் மூன்றுவகைப்பட்டறாயிற்றிருப்பது’ அவையாவன:- ‘ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும் – காமத்தாற் பெற்றபயன்’ (திருவள்ளுவர் குறள்.) என்று மூன்றையும் ப்ரயோஜநமாகச் சொன்னார்கள் தமிழா;’ இதிலே ஊடலாவது – எதிர்த்தலையோடே கூடினால் அஹேதுகமாக விளைவதென்று: அதுதான் -‘என்னையொழியக் குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், உன் உடம்பு பூநாறிற்று’ என்றாற்போலே வருமவை. உணர்த்தலாவது – ‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம்’ என்று பார்த்தே னென்கையும், ‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தே னென்கையும், ‘உன்வரவுக்கு ஒப்பித்தேன்’ என்றாற்போலே சொல்லுமிவை’ இவையிரண்டின் அநந்தரத்தே வருவது கலவி.” என்றருளிச் செய்யப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. மேல் உதாஹரிக்கப்பட்ட குறளின் உரையும் காணத்தக்கது. “ஊடலுணர்தல் புணர்தலிவை காமங் கூடியார் பெற்ற பயன்” என்று குறளின் பாடங் காண்கிறது. (புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.) உணர்தல் என்பதற்கு -‘தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி நாயகியினுடைய ஊடலை நீக்குதல் என்று பொருளுரைக்கப் பட்டிருக்கின்றது.
“புணர்தலை” என்ற விடத்துள்ள ஐகாரம் சாரியை. நீடுநின்ற கண்ணபிரானோடே சிலகாலம் ப்ரணயகலஹமாய்ப் போதுபோக்குவதும், சிலகாலம் ஸம்ச்லேஷரஸமாய்ப் போதுபோக்குவதுமாகிய இக்காரியங்களையே அநாதிகாலமாய்த் தொழிலாகக் கொண்டவர்கள் ஆய்ச்சிகள் என்க.
நிறை புகழ் ஆய்ச்சியர் – நம்மைப் போலே உண்டியே உடையே உகந்தோடித்திரிந்து பழுதேபலபகழும் போக்காமல் முச்சந்தியும் பகவத்விஷய சிந்தனையேயாய்ப் போது போக்குகிறார்கள் ஆய்ச்சிகள் என்ற காரணத்தினால் அவர்கட்குப் புகழ் நிறைந்திருக்குமென்று ஸாமாந்யமாகச் சிலர்அர்த்தம் கொள்ளக்கூடும். இவ்விடத்திற்கு எம்பார் ஒரு விஷோர்தம் அருளிச் செய்வராம்’ (அதாவது) “ஆய்ச்சியர்க்கு நிறைபுகழாவது க்ருஷ்ணனை இன்னாள் நாலுபட்டினி கொண்டாள் இன்னாள் பத்துப்பட்டினி கொண்டாள் என்னும் புகழ்காணும்” என்பராம். இதன் கருத்தென்னென்னில்’ “கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக் கூசிநடுங்கி யமுனையாற்றில், வார்மணற்குன்றில் புலா நின்றேன் வாசுதேவா! உன்வரவுபார்த்தே” இத்யாதிப்படியே கண்ணபிரானுடைய வரவை எதிர்பார்த்திருப்பவர்கள் பல மாதர்’ இவன் இப்படி பலபேர்களை எதிர்பார்த்திருக்கும்படி செய்துவிட்டுத் தன்மனத்துக்கியாளான் ஒருத்தியோடே கலந்திருந்து போதுபோக்கும்’ அப்போது, எதிர்பார்த்திருந்த மாதர்கள் “இன்னமென் கையகத்து ஈங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே” என்ற படி “இனி அந்தக் கண்ணபிரான் இங்கேற வருவானாகில் முகங்கொடுத்து ஒரு வார்த்தையும் சொல்லக்கடவோமல்லோம்” என்று ஸங்கல்பம் செய்து கொண்டு அளவற்ற ரோஷத்துடனிருப்பர்கள், பிறகு தனக்கு ஒழிந்தபோது ஒருநாள் கண்ணபிரான் அளவிறந்த அன்பு பூண்டவன் போல ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் முன்னே வந்துநிற்பன்’ அப்போது அவர்கள் தாங்கள் முன்பு செய்து கொண்ட ஸங்கல்பத்தின்படியே முகங்கொடாமலே யிருப்பார்கள். அப்போது இவன் கண்ணீர்விட்டழுவதும் காலில் கும்பிடுவதுமாய் ஊணுமுறக்கமுமில்லாமல் பல நாட்களளவும் அவர்கள் வீட்டைவிட்டுப் பேராதே இடைசுழித் திண்ணையிலே கிடந்துபடுவன். இப்படி நாலுநாள் பட்டினிகிடந்தபிறகு ஒருத்தி மனமிரங்கி முகங்கொடுப்பள்’ மற்றொருத்தி அவ்வளவிலும் மறம்மாறாதே இவன் எட்டுநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள், மற்றுமொருத்தி அவ்வளவிலும் ஊடல்தீராதே இவன் பத்துநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள். இப்படி பலபலநாள் பட்டினிகிடந்தாகிலும் அவ்வாய்ச்சிகள் பக்கலிலே இவன் முகம்பெற நினைப்பது அவர்களிடத்துள்ள தேஹகுணம் ஆத்மகுணம் முதலியவற்றாலான வைலக்ஷ்ண்யத்தைப் பற்றியிறே. இதனால் அவர்களுடைய புகழ்வீறுபெறு மாய்த்து.
“கோதை கூறிய” என்னாதே “குழற் கோதை கூறிய” என்கையாலே ‘இவள் தன்மயிர் முடியாலே அவனைக் கூடலிழைப்பிக்கவலலன்” என்று ரஸோக்தியாக அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை. இப்பத்துப்பாட்டையும் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை என்றது பகவத்ஸம்ச்லேஷத்துக்காகக் கூடலிழைத்து வருந்தவேண்டும்படியான பாவமில்லை யென்றபடி. இவ்வருளிச் செயலை ஓதவே அநாயாஸமாக பகவத்ஸம்ச்லேஷம் வாய்க்கு மென்று கருத்து.

Leave a Reply